கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்

பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அருளும் வள்ளலாக விளங்கும் ஐயப்ப சுவாமியின் கோயில், கேரள மலைப்பகுதியில் உள்ளது. எருமேலியிலிருந்து நாற்பத்திரண்டு மைல் தொலைவில் மலை, ஆறுகள் சூழ அமைந்துள்ளது. சோலைகளுக்கும் உயர்ந்த மேடு, பள்ளங்களுக்கும் இடையில், நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் சுவாமியின் சந்நிதானம் அமைந்துள்ளது.
சபரிமலை குளிரான மலைப்பிரதேசம், அதிலும் பயண காலமோ மிகவும் பனியும் குளிருமான மார்கழி மாதம்; பாதை மிகவும் கரடு முரடானது; வழியெங்கும் கொடுந்தன்மையுள்ள மிருகங்கள் வாழ்கின்றன. ஆதலால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் விரதங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும், ‘சாமிசரணம்’ என்று வாய்த்த நேரமெல்லாம் உரு ஜெபித்து, இரண்டு மாதகாலம் மனத்தைப் பண்படுத்தி வர வேண்டும். உரு ஜெபிக்க ஜெபிக்க ஒருவித சக்தி தோன்றும்.

1.சபரிமலைச் செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ, 19ம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் அணிந்தால் அன்றைக்கு நல்லநாள்தானா என்று நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து அணிய வேண்டும்.

2.மாலை துளசி மணி 108 கொண்டதாகவோ, ருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தங்கள் தாய் தந்தையின் நல்லாசியுடன் ஐயப்ப பக்தி நிறைந்தவரும் ஐயனின் அவதார தல மகிமைகளை அறிந்து ஒழுகும் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலையை அணிய வேண்டும்.

4. இவ்வாறு மாலை அணிந்தபின் புலால் உண்ணுதல், மது அருந்துதல் கூடாது, கோபதாபம் குரோதம் விரோதம் கொள்ளக்கூடாது.

5. பெண்களைப் (ஆசையுடன்) பார்த்தல், நினைத்தல், விரும்புதல், பேசுதல் ஆகியவை கண்டிப்பாகக் கூடாது.

6. மாலை அணிந்தவர்கள் நீலம், கருப்பு, காவி, மஞ்சள், பச்சை, சிவப்பு ஏதாவது ஒரு வண்ணத்தில் வஸ்திரம் தரிக்க வேண்டும்.(முதல் ஆண்டு மாலை அணிபவர்கள் கருப்புநிற வஸ்திரம் தரிக்க வேண்டும், அவர்கள் கன்னி சுவாமிகள் என்று அழைக்கப்படுவர்.)

7. தீட்சை வளர்த்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

8. மற்றவர்களிடம் பேசும்போது ‘சாமிசரணம்’ எனத் தொடங்கி விடை பெறும்பொழுது ‘சாமிசரணம்’ எனக் கூற வேண்டும்.

9. காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்துக் கோயில்களிலோ, வீடுகளிலோ விநாயகரை வழிபட்டு ஐயப்பன் சரணங்கள் கூறி, வணங்க வேண்டும். (புதன், சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்ய உகந்த நாளாகும்.)

10. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும் பெண்களை மாளிகைப் புறத்து அம்மனாகவும் கருதிப் பழக வேண்டும்.

11. மாலையணிந்தவர்கள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பஜனை நடத்தியும் பூஜை செய்யும் ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம். கன்னி சுவாமிகள் இவ்வாறு செய்வது மிகவும் பயன்தரும்.

12. படுக்கை விரிப்பு தலையணை நீக்கி, தான் உபயோகப்படுத்தும் துண்டை மட்டும் தரையில் விரித்துப் படுக்க வேண்டும்.

13. காலணிகள், குடை போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

14. மரணம் போன்ற துக்க நிகழ்ச்சிகளில் ஐயப்பமார்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ளக் கூடாது. பங்காளிகள், தாயாதிகள் வீடுகளில் இவ்விதம் நேர்ந்து விட்டால், தான் அணிந்துள்ள மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகுதான் கலந்து கொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்து விட்டால் மறுவருடம்தான் மாலையணிந்து செல்ல வேண்டும். சடங்கு(ருதுமங்கள) வீடுகளுக்குச் செல்லக்கூடாது.

15. இரு முடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

16. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

17. முதன் முதலாக மாலை அணிந்துள்ள கன்னிசாமிகள் கூட்டுச் சேர்ந்துள்ள சாமிகளோடு பஜனை செய்து, கன்னி பூஜை செய்ய வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் செல்லுவதே நன்மை பயக்கும்.

18. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

19. யாத்திரை முடிந்து விடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்தியபடியே வீட்டு வாயில் படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

20. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்தப் பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

21. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்தில் மாலையை அணிவித்துவிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

22. பூஜையில் அமரும்பொழுது விநாயகர், முருகர், மீனாட்சி, தங்களின் குலதெய்வம் இவர்களை ஸ்தோத்திரம் செய்து விட்டு ஐயப்பன் சரணகோஷம் போடவேண்டும். பஜனையில் பதினெட்டாம் பாட்டைக் கடைசியில் பாடி மங்களம் பாட வேண்டும். இருமுடி கட்டும் முறைகளையும் இருமுடிக்கு வேண்டிய பொருள்களையும் பயணத்துக்குத் தேவையான பொருள்களையும் மாலை அணிவித்த குருநாதரைக் கேட்டு அதன்படி தயார் செய்துகொள்ளவும்.

1 Kommentare:

Unknown hat gesagt…

i like this all., and everybody should be must(ayyapa pakthan) follow it., and very use full this., thanks .,

Get this gadget at facebook popup like box
09