திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். இவ்விரதம் இவ் வருடம் 09.12.2013 அன்று ஆரம்பமாகின்றது என சோதிடம் கணித்துள்ளது. ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.
மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம்; திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் பெறுகின்றது.
மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும், கன்னிப்பெண்களாலும், "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் "பாவை நோன்பு" என்றும் அழைக்கப்பெறுகின்றது.
சைவகன்னியர்கள்; பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என அழைத்து ஆற்றங்கரை சென்று, "சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி" ஆலயம் சென்று "விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக" அருள் தருவாய் என வேண்டுவர்.
வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைது ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் "பாவை" போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர்.
மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பாகும் என்பது பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.
மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். ''அம்பா ஆடல்'' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு பெண் பிள்ளையின்-தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை. இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர். கற்பே மழைத் தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர். பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது
பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு தருமோத்த புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும் அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம். .
வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய "திருவெம்பாவை"யும் பன்னிரண்டும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய "திருப்பாவை" யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப் பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப் பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.
பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்பாள் ஆலயங்களிலும், சிவன் ஆலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழிச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றன. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப்பெறுகின்றன.
பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் இந் நோன்பு வருடாவருடம் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. அதிகாலை 4 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி நடைபேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புராணக் கதைகள்:
கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும். திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் தேரில் ஆரோகணித்து வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இன்றும் செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே "ஆர்த்திரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது.
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.
இவ் விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் ”பாரணை” செய்வர்.
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen