முழுமுதல் கடவுளான விநாயகர் அருள் பெற பல வகை விரதங்கள் உள்ளன. அவற்றுள் 'விநாயக சஷ்டி' என்ற விரதம் தனிச்சிறப்பு கொண்டது. கந்த சஷ்டி போல 'விநாயகர் சஷ்டி'யும் மகத்துவம் நிறைந்தது. கார்த்திகை மாதம் பிரதமை தினத்தன்று தொடங்கி மார்கழி மாதம் சஷ்டி தினம் வரை 21 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த 21 நாட்களும் விநாயகருக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அதை செய்ய முடியாதவர்கள் இந்த 21 நாள் வழிபாட்டின் இறுதி நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது விரதம் இருந்து நிறைந்த மனதுடன் விநாயகரை வழிபடுதல் வேண்டும். அத்தகைய சிறப்பான தினம் இன்று (சனிக்கிழமை) வருகிறது.
எனவே விநாயகர் சஷ்டி விரதம் இருந்து வழிபடுவது மிகவும் நல்லது. இந்த விரதத்துக்கு 'பிள்ளையார் நோன்பு' என்றும் பெயர். மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விரதம் என்றும் இந்த விரதம் அழைக்கப்படுகிறது. விஷ்ணு பகவானை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததைத் தொடர்ந்து, அந்த சாபத்தை நிவர்த்தி செய்ய இந்த விரதமே உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:-
ஒருமுறை சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மகா விஷ்ணு, சிவபெருமானுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லும்படி ஆகி விட்டது. இதனால் பார்வதி தேவி கடும் கோபம் கொண்டாள். மகா விஷ்ணுவை குருட்டு மலைப்பாம்பாக போகும்படி சபித்து விட்டார்.
விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், சுயமுகாசுரனின் வதம் நடைபெறும் வரை பொறுமையாக காத்து இருக்கும்படி கூறினார். சில நாட்களில் சுயமுகாகரனை வதம் செய்து விநாயகர், அவனுக்கு முக்தி அளித்தார். பிறகு அவர் தன் இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆலங்காட்டில் மலைப்பாம்பாக இருந்த மகாவிஷ்ணுவை கண்டார்.
விநாயகரின் பார்வை பட்டதுமே விஷ்ணு தன் சுய உருவைப் பெற்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, 'விநாயகரே எனக்கு காட்சி அளித்து மகிழ்ச்சி கொடுத்த மார்கழி சஷ்டி தினத்தன்று, உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் துன்பம், துயரங்களில் இருந்து விடுதலை பெற்று நினைத்ததை பெற அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே விநாயகர் சஷ்டி விரதம் இருப்பவர்கள் சாபம், தோஷங்கள் நீங்கப்பெற்று முக்தி பெறலாம் என்பது ஐதீகம். இன்று முழுவிரதம் இருந்து விநாயகர் சஷ்டியை கடைபிடிப்பவர்களுக்கு வாழ்வில் என்றும் குன்றாத செல்வம் சேரும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார் நோன்பு முன்னிட்டு, விநாயகர் கதை கேட்பதும், விநாயகர் திருவிளையாடல்களை கேட்பதும் புண்ணியமாகும்.
அகத்திய முனிவரால் எழுதப்பட்ட பிள்ளையார் கதையை நாளை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது. விநாயகர் சஷ்டியை முன்னிட்டு நாளை விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். அதில் கலந்து கொள்ளலாம். முடிந்தவர்கள் விநாயகர் சஷ்டி பூஜைகளுக்கான, அபிஷேகத்துக்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்யலாம்.
விநாயகப் பெருமான் உலகில் உள்ள எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியவர். அவரை வழிபட நமக்கு எல்லாம் கிடைக்கும். அது மட்டுமின்றி நாளை அவரை நினைத்து தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும். இன்று விநாயகருக்கு மிகவும் பிடித்த நைவேத்தியங்களை படைக்கலாம். கருப்பட்டியில் மாவு கலந்து அதை விநாயகர் போல செய்து, அதில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
அந்த கருப்பட்டி பணியாரத்தை சாப்பிட்டால் உடல் நலம் பெறலாம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நாளை விநாயகரை வழிபடும் போது, 'ஓம் கணேசாய நம' என்று சொல்ல மறக்காதீர்கள். இந்த மந்திரத்தை உச்சரிக்க, உச்சரிக்க... விநாயகர் சஷ்டி பலன்கள் நிச்சயம் உங்களை வந்து சேரும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen