முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம், ‘திருமுருகாற்றுப் படை’ ஆகும். பெரும் புலவர் நக்கீரர், முருகன் அருள் பெற்றுப் படைத்த சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படை, முருகப் பெருமான் கோயில் -
-கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
முருகன் அருள் பெற்ற புலவர், மற்றோர் புலவரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப் படை ஆகும். இதனால், திருமுருகாற்றுப் படைக்குப் ‘புலவர் ஆற்றுப் படை’ என்ற வேறு பெயரும் உண்டு.’இயற்கை அழகே முருகன்’ என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும். அதனால் முருகப் பெருமானின் அழகைக் ‘கை புனைந்து இயற்றாக் கவின் பெரு வனப்பு’ என்று கொண்டாடுவார். பழந்தமிழ் இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம், முருகப் பெருமானை ‘சேயோன்’ என்ற பெயரால் அழைக்கிறது. ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்பது தொல்காப்பிய சூத்திரத்தில் காணப்பெறும் தொடராகும். ‘சேயோன்’ என்பதற்கு ‘இளையவன்’ என்ற பொருளும் உண்டு. இளமை எங்குள்ளதோ அங்கே அழகும் கொஞ்சி விளையாடும். ‘மைவரை உலகம்’ என்றால் ‘மழை மேகம் சூழ்ந்த மலைப் பகுதி’ என்பது பொருள். மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சித் திணை என்று கூறுகிறது தொல்காப்பியம். ஆம்! குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் நின்று அருள் பாலிப்பான்.’ஆற்றுப் படை’ என்பதே ‘ஆறுபடை’ எனத் திரிந்துவிட்டது என்றொரு கருத்துண்டு. முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளாவன:-
திருப்பரங்குன்றம்
‘முதல் படை வீடு’ என்ற பெருமையைப் பெறுகின்றது, மதுரை மாநகரை அடுத்துள்ள திருப்பரங்குன்றம். சூரபத்மனை அழித்து, தேவர்களைப் பாதுகாத்தார் முருகப் பெருமான். அவருக்கு தன் மகள் தேவசேனாவை மணம் முடிக்க விரும்பினான் இந்திரன். முருகப் பெருமான் - தேவசேனா திருமணம் நிகழ்ந்த திருத்தலமே முதலாம் படை வீடாகிய திருப்பரங்குன்றம்.திருப்பரங்குன்றத்தில் மலையைக் குடைந்து கர்ப்ப கிரஹம் அமைக்கப் பெற்றுள்ளது.
திருச்செந்தூர்
சூரபத் மனை முருகப் பெருமான் அழித்த திருத்தலமே இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். நெல்லை மாவட்டத்தில் மிகச் சிறந்த முருகன் தலமாக, கடற்கரைக் கோயிலாகத் திகழ்கின்றது இவ்வாலயம். ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி விழா, மிகவும் சிறப்பாக நிகழ்கின்றது. திருமலை நாயக்க மன்னரின் காரியக்காரர் வடமையப்பப் பிள்ளை என்பவர், திருச்செந்தூர் முருகப் பெருமானின் பக்தராக விளங்கியவர்; இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தவரென்று வரலாறு சொல்கிறது.ஊமையாக இருந்த குமர குருபரர், செந்திலாண்டவர் அருளால் பேசும் சக்தி பெற்று, பாடும் திறனும் பெற்று ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’, ‘மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்’ ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்.டச்சு கொள்ளையர்களை நடுநடுங்க வைத்து, அவர்களையும் தன்னை வணங்க வைத்த தனி ஆற்றல் படைத்தவர் திருச்செந்தூர் முருகன் என்றொரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.
பழம் நீ (பழனி)
‘பழம் நீ’ என்பதே ‘பழனி’ எனத் திரிந்தது. மூன்றாம் படை வீடான பழனிக்கு, ‘திரு ஆவினன் குடி’ என்பதே பழந்தமிழ்ப் பெயராகும். இங்கு ஆண்டுதோறும் நிகழும் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கு, பல்வேறு காவடிகள் சுமந்து பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர். இங்கு திருத்தேர் விழா, திருக்கல்யாண விழா, கந்த சஷ்டி விழா, ஆடிக் கிருத்திகை விழா ஆகியவையும் மிகச் சிறப்பாக நடக்கின்றன. பழனி மலையில் பாதம் தேய நடந்து சென்று வழிபாடு செய்வதே சிறப்பு. இருப்பினும் முடியாதவர்களுக்காக விசேஷ வாகன வசதியை ஆலய நிர்வாகம் செய்துள்ளது. மலையுச்சியில் நவ பாஷனங்களால் உருவாக்கப்பட்ட ஞானப் பழமாக முருகப் பெருமான் விளங்குகின்றார். இவருடைய எழிலின் நேர்த்தியைக் காணக் கண் கோடி வேண்டும். பழனி முருகப் பெருமானைத் தங்கத் தேரில் வைத்து வழிபாடு செய்யும் எழில்மிகு காட்சியையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். வேண்டுதலாகப் பணம் கட்டி முருகப் பெருமான் பவனி வரும் தங்கத் தேரை இழுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இங்கே கிரிவலமும் பௌர்ணமி நாளில் நிகழ்கின்றது.
சுவாமிமலை
பிரணவ மந்திரத்தின் உட்பொருளை, தந்தை சிவபெருமானுக்கே உபதேசித்த தனயன் முருகப் பெருமான். இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த நான்காம் படை வீடே சுவாமிமலை. ‘சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா’ என்று இந்த லீலையை வர்ணித்து மகிழ்ந்துள்ளார் அருணகிரிநாதர். இந்தத் திருத்தலத்தை திருமுருகாற்றுப் படையும், சிலப்பதிகாரமும் ‘திரு ஏரகம்’ என்று குறிப்பிடுகின்றன. தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகிலுள்ள ‘சுவாமி மலை’ முருகன் தலத்தில் எப்போதும் திருவிழாக் கோலம்தான். இங்கும் ஆடிக் கிருத்திகை விழா, கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகப் பெருவிழா, பங்குனி உத்திரப் பெருவிழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடக்கின்றன.
திருத்தணிகை
‘சிக்கல்’ என்ற திருத்தலத்தில் வேல் வாங்கி, செந்தூரில் சூரபத்மாதி அவுணர்களை அழித்து, சினம் அடங்கி அமைதி காண முருகப் பெருமான் திருக்கோயில் கொண்ட ஐந்தாம் படை வீடே திருத்தணி. போர் உணர்வு தணிந்ததால் இத்தலம் ‘செருத்தணி’ என்று முன்பு அழைக்கப் பெற்றதாகவும், ‘செருத்தணி’ என்பதே ‘திருத்தணி’ எனத் திரிந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.ஆறுபடை வீடுகளில் படித் திருவிழா, குறிப்பாக ஆடிக் கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக நிகழும் திருத்தலம் திருத்தணியாகும். திருப்புகழைப் பாடிப் பரவும் பக்தர்களின் பாக்கியமாக ஆடிக் கிருத்திகை அமைந்துள்ளது.கிருத்திகை விரதம் இருந்து, திருத்தணி முருகனைப் பக்தியுடன் படியேறி வழிபாடு செய்தால் சகல வளமும் நலமும் பெறலாம். ’வள்ளி’ என்ற குறவர் குலப் பெண்ணை மணம்புரிந்த திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் திருத்தணிக்கு உண்டு.’தேவசேனா’ என்ற தேவேந்திரன் திருமகளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமான், ‘வள்ளி’ என்ற குறவர் மகளைத் திருத்தணியில் மணம் செய்து கொண்டான். முருகப் பெருமானுக்கு ‘ஏற்றத் தாழ்வு’ என்பது இல்லை என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே வள்ளி-தெய்வயானை (தேவசேனா) திருமணமாகும். ஆம்! பக்தர்களிடம் உயர்வு -தாழ்வு காட்டாத பரம்பொருளே முருகன்! முருகப் பெருமானின் இரு தார மணத்தின் நோக்கம் இதுதான்.
பழமுதிர் சோலை
‘பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’ என்று தன் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்வார் பெரும்புலவர் நக்கீரர். ‘அழகர் மலை’ என அழைக்கப் பெறும் ‘பழமுதிர்சோலை’ சைவ-வைணவ ஒருமைப்பாட்டின் சின்னம்! இந்தத் தலத்தில் கள்ளழகராகிய திருமாலும் கோயில் கொண்டுள்ளார்! அழகுக்கெல்லாம் அழகான முருகப் பெருமானும் குடி கொண்டிருக்கிறார். ‘முருகு’ என்ற சொல்லுக்கே ‘அழகு’ எனும் பொருள் உண்டே!
கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, பங்குனி உத்திர விழா
முருகப் பெருமான் திருக்கோயில் கொண்ட ஆறுபடை வீடுகளே அல்லாமல் குன்றக்குடி, குமரமலை, குன்றத்தூர், சிக்கல், எண்கண், திருவண்ணாமலை, வயலூர், விராலிமலை முதலான பல்வேறு தொன்மைத் தலங்கள் தமிழகத்தில் உள்ளன. ஐயன் முருகன் அமர்ந்துள்ள ஆலயங்கள் அனைத்திலுமே எப்போதும் விழாக் கோலம்தான். இந்தத் திருத்தலங்களில், கந்த சஷ்டி சூர சம்ஹார விழா, தைப்பூச விழா, பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா ஆகிய விழாக்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன.குறிப்பாக திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி சூர சம்ஹார விழா உலகப் புகழ் பெற்ற விழாவாகும். பழனி பங்குனித் தேரோட்டம் மிகவும் புகழ் மிக்கது.
சட்டியிலிருந்தால்…..
‘சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்’ என்பது சிலேடை நயத்துடன் கூறப் பெறும் பொன் மொழி ஆகும். ‘மண் சட்டியில் சோறு இருந்தால்தான் அகப்பையில் மொண்டு எடுக்க முடியும்’ என்பது இதன் சாதாரணப் பொருள். ஆனால் இப்பழமொழிக்கு நுட்பமான தத்துவப் பொருளும் உண்டென்பதை திருமுருக கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பல பெரியோர்கள் விளக்கியுள்ளனர். ‘கந்தசஷ்டி’ விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் பிள்ளைச் செல்வம் உருவாகும் என்பதை இம்முதுமொழி சுட்டிக் காட்டுகிறது. சஷ்டி விரதம் இருந்தால் மழலைப் பேறு மட்டுமின்றி, எல்லாச் செல்வங்களையும் பெறலாம் என்பதே மூத்தோரின் கருத்து.
தித்திக்கும் திருப்புகழ்
முருகப் பெருமானை நினைக்கும்போதே அருணகிரி நாதரின் நினைவும் சேர்ந்தே வரும். தமிழ்க் கடவுளான கந்தவேளை, சந்த வேளாகிய அருணகிரியார், ‘திருப்புகழ்’ பாடித் துதித்துள்ளது, தமிழர் செய்த தவப் பயனாகும். தன் பாட்டுடைத் தலைவனாகிய முருகப் பெருமானை பாடுகின்ற வேளையில், அவனது பெற்றோரான சிவபெருமான், பார்வதி - மாமன் மாயவன், மாமி இலக்குமி, மூத்த சகோதரன் விநாயகன் என சகலரையும் ‘பேத திருஷ்டி’ இல்லாமல் புகழ்ந்துள்ளமை, அருணகிரியாரின் தனிச் சிறப்பு. குமரக் கடவுளின் வாகனமாகிய மயில், அவன் கொடியிலுள்ள சேவல், அவன் கரத்திலுள்ள சக்தி வேல் என எதையும் விட்டு விடாது துதித்துள்ளார் இந்த அருளாளர்.திருப்புகழ் அமுதத்தில், தேவ குஞ்சரியையும் வள்ளிப் பிராட்டியையும் வழுத்தியுள்ளார். ‘திருமால்’ என்று எடுத்துக் கொண்டாலும் அவரது அவதாரங்களையும் பரவலாகப் பாடியுள்ளார். இவை போதாது திருஞான சம்பந்தர், சுந்தரர், திலகவதியார் போன்ற சிவனடியார்களையும் போற்றியுள்ளார்.ஆதி சங்கரருக்குப் பிறகு சமய சமரசத்தோடு பாடிய அருட்கவிகள் சிலரில் அருணகிரி நாதருக்கு முக்கிய இடம் உண்டு. ‘வனச மாமியாராட, நெடிய மாமனாராட, மயிலுமாடி நீயாடி வர வேண்டும்’ என்று பாடிய அருணகிரி நாதரிடம், ஆடி கிருத்திகை நாளன்று, ‘நீ ஆடி வர வேண்டும்! நீ பெற்ற பேறு நாங்களும் பெற வேண்டும்’ என வேண்டுவோம். அவருடைய பக்தியில் நூறு கோடியில் ஒரு பங்காவது நாம் பெற்றுவிட்டால், கந்தனருள் நமக்கு நிரந்தரம் என்பதில் ‘வேல் முனை’ அளவும் ஐயமில்லை.
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen