கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

தமிழும் சைவமும் – காளமேகம் !

இந்து மதம் என்று சொன்னாலும் பெயரில்லாத மதம் நம் மதம். ” நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது



ஏற்பட்டது.” என்கிறார் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி.

அது மட்டுமின்றி “எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். இடைமருதுக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.” எனவும் சொல்கிறார்.



சைவம் தமிழுக்கு செய்த தொண்டு அளவிட முடியாதது. கவிச்சுவையில் சைவர்களான ஔவையும், காளமேகமும் செய்த பணிகள் இணையில்லாதவை.

காளமேகம் –

இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி பாடுவதிலும் சிலேடைப்படல்கள் பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்ராண்டின் இடைப்பகுதி.
பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை பெற்றதால் இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

னிப்பாடல் -

தமிழ் இலக்கியத்தில் தனிப்பாடல்களுக்குத் தனி இடம் உண்டு. அவை வேறுபட்ட காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. தனிப்பாடல் திறன் இருந்தும் காளமேகம் பெருங்காப்பியம் எழுதவில்லை. எனினும் தனிப்பாடல்களில் அவரைத் தவிற வேறு யாரும் வசையில் தனித்து நிற்க முடியாது. சொற்களில் எளிமையும், இரண்டு பொருள் படும் மொழி ஆளுமையும், நகையும், எள்ளலும் உடைய தனி பானி அவருடையது. காளமேகம் தவிற இந்த தனிப்பாடல்களில் திறம் பெற்ற புலவர்கள் கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர் என சிலரே.

சிறப்பு -

இவர் ஆசு கவி பாடுவதிலும், வசை பாடுவதிலும் வல்லவர் என்பதை ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்’, ‘வசைபாடக் காளமேகம்’ எனும் தொடர்களால் அறியலாம். ஆசு கவி என்பது நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர் என்று பொருள் கொள்க.

ஆசு கவி -

தமிழின் “க’ என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல உடனே பாடுகிறார் நம் கவி,
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
கூகை என்றால் ஆந்தையை குறிக்கும். காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்.

வசை பாடல் -

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.
கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்?

எள்ளல் -

ஒருவரை கிண்டல் செய்வதை எள்ளி நகையாடுதல் என்கிறோம். இந்த வகைப் பாடலிலும் கவியை அடித்துக் கொள்ள ஆளில்லை.
தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது இப்பாடல்.
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்!
எளிமையான தமிழ் சொற்களைக் கொண்டே பாடல் அமைத்து அனைவரும் அறிந்து இன்புறும் வகையில் உள்ள பாடல் இது. பெருமாளை தூக்கி கொண்டு போகும் கழுகென எள்ளல் தெரிந்தாலும், திருஉலாவை அழகாக சொல்வதை காண முடிகிறது.

சிலேடை -

ஒரே பாடல் இரு பொருள் தருமாறு பாடுவது சிலேடை. ஒரு நாள் நாகப்பட்டினத்திற்கு செல்லும் காளமேகத்திற்கு பசி எடுக்கிறது. உணவுக்காக சத்திரத்தை தேடி அலைந்து இறுதியில் “காத்தான்” என்பவரின் சத்திரத்தை காண்கிறார். பணி எல்லாம் முடித்துவிட்டு வேலையாட்கள் உறங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்பி தன்னுடைய பசியை சொல்கிறார். பணியாட்கள் தூக்க கலக்கத்தில் உலையேற்றி சமைக்கின்றார்கள். இருப்பினும் கவிக்கு பசி அதிகமாக சத்தமாக இப்படி பாடுகிறார்,
“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.”
கவியின் வசை காலம் கடந்து நிற்குமென அஞ்சிய சத்திர உரிமையாளர், கவிக்கு சேவை செய்து உணவு படைத்துவிட்டு அந்தப் பாடலை கைவிடுமாறு கேட்க. “ஊரெல்லாம் பஞ்சத்தால் அரிசி அத்தமித்துப் போனாலும், உன்னிடத்தில் தானமாய் அரிசி வந்து நிற்கும். அதைக் குத்தி உலையிட்டு பரிமாற ஊரின் பசியடங்கும். அந்த அன்னத்தின் வெண்மை கண்டு வெள்ளியும் வெட்கப்பட்டு மேற்கிளம்பும்.” என கவியோ மகிழ்ச்சியோடு பாடலுக்கு விளக்கம் தருகிறார்.
வசை பாடுவதில் வல்லவர் புகழ்ந்துறைப்பதிலும் வல்லவர். என்ன ஒரு கவித்திறன்.

இயற்றியுள்ள நூல்கள் -

திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம்.

Get this gadget at facebook popup like box
09