கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

இழந்த பொருளை மீட்டுத் தரும் ஈசன்

பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலம் அது. பதினான்கு வருட வனவாசத்தில் பதிமூன்று வருடங்கள் காட்டிலும் ஒரு வருடம் அஞ்ஞான வாசம், அதாவது யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்பது கட்டளை. திண்டிவனம் அப்போது பெரும் காடு. இங்குள்ள முன்னூர் காட்டுப்பகுதியில்தான் பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்ததாக ஐதீகம்.
ஒருநாள் அனைவருக்கும் கடும் பசி.




அப்போது தர்மர் பீமனை அனுப்பி உணவு கொண்டுவரச் சொன்னார். உடனே பீமன் வெளியே வந்து உணவு தேடினான். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் பசி மயக்கத்தில் ஓமந்தூரில் உள்ள சிவன் கோயிலில் வந்து சிவனையும் பார்வதி தேவியையும் உணவளிக்குமாறு வேண்டினான். அவர்கள் அருளால் அவனுக்கு உடனேயே அவ்வழியே சென்ற ஒருவர் மூலமாகப் பால் கிடைக்க, அதைக் குடித்துப் பசியாறினான் பீமன். தனக்கு அருள் நல்கிய தெய்வங்களை குடி கொண்டிருந்த அந்தக் கோயிலில் வழிபட்டு நன்றி தெரிவித்தான். பீமன் பூஜித்ததாலேயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.

பிறகு, பீமன், ஈசனருளால் தன் சகோதரர்களுக்கும் உணவு பெற்றுக் கொண்டான். கூடவே, ‘‘பஞ்ச பாண்டவர்களாகிய நாங்களே இப்படி உண்ண உணவின்றி துன்பங்களை அனுபவித்து வருகிறோமே, சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய பசி, துன்பத்தையும் தாங்கள்தான் போக்க வேண்டும்’’ என்றும் ஈசனிடம் வேண்டிக்கொண்டான். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவ்வாறே அருள்வதாக மகாதேவன் வாக்களித்தார்.

பீமனுக்கு பால் அளித்ததால், இத்தல அம்பாள், க்ஷீராம்பிகை (பாலம்பிகை) என்று அழைக்கப்படுகிறாள்.
இத்தலத்துக்கு ஓமந்தூர் என்ற பெயர் எப்படி உண்டானது?

ஓம் என்பது அயன், ஹரி, ஹரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரணவ மந்திரம். அந்தூர் என்ற சொல்லுக்கு பாத கிண்கிணி என்று பொருள். மகரிஷிகளின் தவத்திற்கு இறங்கிய சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது அரனது பாதகிண்கிணியின் சப்தம் முதலில் கேட்ட ஊர், ஆதலால், இது ஓமந்தூர் (ஓம்+அந்தூர்) ஆயிற்று.

பண்டைய காலத்தில் நல்லியக்கோடன் எனும் அரசன் ஆண்ட ஒய்மா நாட்டின் ஒரு பகுதியாக இந்த ஓமந்தூர் இருந்துள்ளது என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற புறந்தமிழ் இலக்கியம் தெரிவிக்கிறது. ஓய்மா நாடு என்பது இன்றைய திண்டிவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். ராஜராஜசோழனின் 11வது ஆட்சியாண்டு (985&1014) கல்வெட்டு இத்தலத்தை ஒவ்வூர் என்றும் முதலாம் ராஜ நாராயண சம்புவராயர் (1337&1368) கல்வெட்டு ஒய்மா நாட்டு ஓகந்தூர் என்றும் குறிப்பிடுகிறது. அது மருவி தற்போது ஓமந்தூராக வழங்கி
வருகிறது.

குறிப்பிட்ட சில சிவன் கோயில்களைப்போல இங்கும் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலின் கருவறை, இடைக்கட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவை எழில் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களும் சம்புவராய மன்னர்களும் இந்த கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை
செய்துள்ளனர்.

சதுரமான கருவறையில் 5 அடி உயரத்தில், லிங்க வடிவில் பீமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். பீமேஸ்வரருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. கருவறையின் வெளிச்சுவர்களில் உள்ள தெற்குப்புற தேவ கோட்டங்களில் தாமரை மலர்களின் மேல் நர்த்தனமாடும் விநாயகப் பெருமான், கல்லால மரத்தின் மீது அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானஉபதேசம் வழங்கும் தட்சிணாமூர்த்தி, கிழக்கே சங்கு&சக்கரம் ஏந்தி நிற்கும் திருமால், வடக்கே பிரம்மன், திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையின் வெளியே வலதுபுறம் பைரவமூர்த்தி, ராஜராஜேஸ்வரி, இடதுபுறம் சூரியபகவான் தரிசனம்  தருகிறார்கள்.

மகாமண்டப தூணில் ஆஞ்சநேயர் உருவம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தியின் தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நினைவாற்றல் திறன் குறைந்த மாணவர்கள் வியாழக்கிழமை தோறும் இந்த தட்சிணாமூர்த்தியை நெய்தீபமேற்றி வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கோயிலின் தென்மேற்கு பகுதியில் வரசித்தி விநாயகரும் மேற்கு மூலையில் நாகர் கோயிலும் (ராகு&கேது தோஷம் நீக்கும் வல்லமை கொண்டது), வடமேற்கே வள்ளி&தெய்வானை சமேதராக ஆறுமுகப்பெருமானும் வடமேற்கு திசையில் க்ஷீராம்பிகையும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

பீமேஸ்வரர் கருவறைக்கு நேர் எதிரே மகாமண்டபத்தின் வெளியே, தனி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தி பகவான், சாளரத்தின் வழியே சிவபெருமானை தரிசிக்கிறார். அதனையொட்டி பலிபீடம் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நதியும் உள்ளது. தல விருட்சம் வில்வமரம். கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் கலைநயத்துடன் காணப்
படுகிறது. தூண்களின் அழகிய வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

இங்கு பிரதோஷ வழிபாட்டின்போது இறைவனை மனமுருக வேண்டினால் சகல செல்வங்களும் வந்து சேரும். பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்ட பின்னர்தான் இழந்த ராஜ்யத்தை போரிட்டு மீட்டனர். அதனால் பீமேஸ்வரரை வழிபட்டால் இழந்த சொத்துக்கள், செல்வங்கள் மீண்டும் நம்மைத் தேடிவரும்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது 1954ம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு முறையாக பராமரிக்கப்படாமல் கருவறை விமானம் பழுதடைந்தது. இதையடுத்து கருவறை விமானம், விநாயகர், முருகன், பாலம்பிகை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சந்நதி ஆகியவற்றின் திருப்பணி நடந்து வருகிறது.

ஓமந்தூர், புதுச்சேரி&திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உண்டு

Get this gadget at facebook popup like box
09