கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கோடீஸ்வர யோகம்

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
 
பிறப்பால் கோடீஸ்வர யோகம்:
 
கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர். குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.
 
 
9ம் அதிபதியுடன் சுபகிரகங்கள் இணைந்து லக்னாதிபதி பலம் பெற்றால், தந்தை முன்னேற்றம் பெற்று, அவர் மூலம் பணம், புகழ் பெறுவர். 9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத் தரும். சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, நீச பங்கம் முதலான வகைகளில் பலம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும் பெற்றிடுவர். 2, 9, 11ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தால், குடும்பத்தினரால் பாக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெற்று, பெரும் செல்வந்தராக வாழ்க்கை நடத்துவர்.
ராசி, லக்னாதிபதி தசை:
 
ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், பெருத்த முன்னேற்றத்தை எளிதில் அடைவாா்்கள். அதேபோல், 2, 10, 11ம் அதிபதிகளின் தசை சுப பலம் பெற்று நடைபெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.
 
குரு, கேதுவினால் கோடீஸ்வர யோகம்:
 
குருவிற்கு கேந்திர (1, 4, 7, 10) திரிகோண (1, 5, 9) இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். குரு, கேது கெடாமலும், குரு, கேது கேந்திர திரிகோணங்களில் இணைந்து நின்றாலும்் தன் புத்தி, உழைப்பால் கோடீஸ்வரராகிவிடுவர். குரு, கேது இணைவும், கேதுவுக்்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும். 6, 8, 12ல் குரு இருந்து, கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது யோக பலனைக் குறைக்கவே செய்யும்.
 
தொழிலால் கோடீஸ்வரர்:
 
10ம் அதிபதி, 11ம் அதிபதி பலம் பெற்று சுபகிரக பார்வை பெற்றாலும், 10, 11ம் அதிபதி இணைந்து 4, 9 இடங்களில் இருந்தாலும், 4, 9ம் அதிபதியின் பார்வை பெற்றாலும் தொழில் வருவாய் மூலம் கார், பங்களா என்று சுகமாக வாழ்வர். 10, 11ம் அதிபதிகள் பாதிக்கப்படாமல் இருந்து தசை நடைபெற்றால் தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும். 4ம் இடத்துக்கு பலம் பெற்ற சுபகிரக பார்வை ஏற்பட்டாலோ, 4ல் லக்னாதிபதியோ, 2, 5, 9, 11ம் அதிபதிகள் நின்றாலோ வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சம் இருக்காது. பஞ்சமாதிபதி, தனஸ்தானாதிபதி தசை, சுபகிரக பார்வையுடன் நடைபெற்றால், சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.
 
யாரால் யோகம்?
 
11, 9ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். 2, 7, 9ம் அதிபதிகள் இணைந்து 4, 11ம் வீடுகளில் நின்றால் வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்வர்.
விபரீத ராஜ யோகம்:
 
'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.
 
கோடீஸ்வரராக வழிமுறைகள்:
 
சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.
பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா, தொழிலால் லாபம் கிடைக்குமா, கூட்டுத் தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது. அவசரக் கோலத்தில் தொழில் தொடங்கி, முடங்கிப்் போனவர்கள் ஏராளம். கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நலம். குரு வருடந்தோறும் மாறுவதால், பொதுவாக குருபலம் இருக்கிறது என்று புதிய தொழில் தொடங்கிவிடக்கூடாது.
கோசார பலனை மட்டும் பார்க்காமல் 3, 6, 8, 12ம் அதிபதி தசை, பாதகாதிபதி தசை, மாரகாதிபதி தசைகளைத் தவிர்த்தும், நடக்கும் தசையின் நிலையை ஜாதகத்தில் முறையாகத் தெரிந்துகொண்டும் புதிய முடிவுகளை எடுத்தால், தோல்விகளைத் தவிர்க்கலாம். கோடீஸ்வர யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், புதாதித்ய யோகம் போன்ற ராஜயோக பலன்கள் இருந்தும் அதற்குரிய தசை, பலம் இவற்றை அறிந்து சுப பலன்களை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைப் பலர் அமைத்துக் கொள்ளாமல் விடுவதால், யோகங்களின் பலன்கள் முழுதாகக் கிடைப்பதில்லை. உங்களை நீங்கள் சரிசெய்து கொண்டால் அடுத்த நொடியேகூட உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து நீங்களும் கோடீஸ்வரராகிவிட முடியும்.

Get this gadget at facebook popup like box
09