கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் விரதம்

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். 



விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். 

அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம். 

அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும். இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். 

மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும் என்று மனம் உருக வணங்க வேண்டும். பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். 

இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் செல்வ வளம் சேரும். 

 மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும். 

 சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

Get this gadget at facebook popup like box
09