திருவண்ணாமலை என்றதும் நினைவுக்கு வருவது கிரிவலம். அதுவும் கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று மலைமீது ஏற்றப்படும் ஜோதி தரிசனம் வெகுவாகப் போற்றப்படுகிறது.
அன்று இறைவன் அண்ணாமலையாரையும் அன்னை உண்ணாமுலையம்மையையும் தரிசித்து, ஜோதி தரிசனம்
கண்டபின் கிரிவலம் வந்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். மலைமீது ஏற்றப்படும் ஜோதி தொடர்ந்து பதினோரு நாட்கள் ஒளிதரும். இதனை பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்களும் தரிசிக்கலாம்.
தீபமேற்றப்படும் முதல்நாள் ஜோதி தரிசனம் கண்டால் பாவங்கள் அழியும்; புனிதம் சேரும். இரண்டாம் நாள் தரிசிக்க சுகமான வாழ்வு கிட்டும். மூன்றாம் நாள் தரிசிக்க செல்வவளம் பெருகும். நான்காம் நாள்- உறவுகள் பலப்படும். ஐந்தாம் நாள்- தம்பதிகள் ஒற்றுமையாகத் திகழ்வர். ஆறாம் நாள்- அறிவிற்சிறந்த மக்கட்செல்வம் கிட்டுவதுடன், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஏழாம் நாள்- சனியின் தாக்கம் விலகும். எட்டாம் நாள்- பீடைகள் விலகும். ஒன்பதாம் நாள் நவகிரக தோஷங்கள் நீங்கும். பத்தாம் நாள்- நினைத்த காரியம் கைகூடும். பதினொன்றாம் நாள் வரை தொடர்ந்து ஜோதி தரிசனம் கண்டு வழிபட்டால் மறுபிறவியில்லை என்கிறது அண்ணாமலை புராணம்.
பொதுவாக, திருவண்ணா மலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழைவந்தால் ஒதுங்கக்கூடாது; குடைபிடித்துக்கொண்டும் செல்லக்கூடாது. ஏனெனில், அந்த சமயத்தில் வானிலிருந்து அமுத மழைத்துளிகள் இறங்க வாய்ப்புள்ளதாம். இது குறித்து புராணம் கூறும் தகவல்...
மனிதனாலோ- மிருகத் தாலோ, பகலிலோ- இரவிலோ, தரையிலோ- வானிலோ சாகாத வரம்பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு, மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச்சென்றான்.
அவன் தவம்புரியும் இடத்தைத் தெரிந்துகொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி. அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலையறிந்த நாரதர், "திருவண்ணாமலைத் திருத்தலம் சென்று, காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். அதன்படிதிருவண்ணாமலையில் இறைவனையும் இறைவியையும் தரிசித்துவிட்டு, காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று "அமுதபுஷ்ப மழை' பொழியத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அத்தகைய பூமா தேவியை சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப் பொழிவு இறைத் தன்மையுடையது. ஒரு கோடி மழைத்துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத்துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்; விவசாயம் செழித்து வளரும்; அமைதி நிலவும்.
மேலும், அங்கு அமுதபுஷ்ப மூலிகை என்னும் அரிய வகைத் தாவரம் இயற்கையாகத் தோன்றும்.
மழைத்துளிகள் கனமாக விழவே, பாறையொன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. காயத்ரி மந்திரத்தையும் ஜெபித்தவண்ணமிருந்தாள். அப்போது விழுந்தஅமுதத்துளியொன்று பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப்பையையும் அடைந்தது. அதை கருவிலிருக்கும் குழந்தை பிரகலாதன் உண்டான். மேலும் அந்தப் பாறையில் அமுதபுஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம்வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசிகூறிக் கொடுத்தார்கள்.
அவள் வயிற்றில் வளரும் சிசுமூலம் மகாவிஷ்ணு புது அவதாரமெடுக்கவிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகினாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது.
"தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என் நாராயணன்' என்று பின்னாளில் பிரகலாதன் கூறியபோது, இரணியன் தனது கதாயுதத்தால் தூணை அடித்தான். அப்போது தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வெளிப்பட்டார். அவரது உக்கிரம் தாங்காமல் இரணியன் மயங்கிவிழுந்தான். அவனைத் தன் மடிமீது கிடத்தி வயிற்றை தன் கூரிய கை நகங்களால் கிழித்து குடலை வெளியே எடுத்தார் நரசிம்மர். ஸ்ரீநரசிம்மரின் அந்த உக்கிரம் பிரகலாதனைத் தாக்காதது, அந்த அமுதபுஷ்ப மூலிகையின் சக்தியால்தான் என்று புராணம் கூறுகிறது.
மழையும் வெய்யிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால், நமது வீட்டில் செல்வ மழை பொழியும். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன் கிட்டும்.
தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமென்பது விதி.
பொதுவாக இறைவனே ஜோதியாய்க் காட்சிதந்து குளிர்ந்த இந்தத் திருவண்ணா மலையை ஞாயிற்றுக்கிழமையில் கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும்; திங்கட்கிழமை வலம்வர ஏழு உலகங்களை வலம்வந்த பலனும்; செவ்வாயன்று வலம்வர கடன்தொல்லைகள் நீங்கி செல்வவளமும்; புதன் கிழமை வலம்வர சிறந்த கல்வி ஞானமும்; வியாழனன்று வலம்வர தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குருவாகும் தகுதியும்; வெள்ளிக்கிழமையில் வலம்வர விஷ்ணுவின் அனுக்கிரகமும்; சனிக்கிழமை வலம் வருபவர்களுக்கு நவகிரகத் தொல்லைகள் நீங்குமென்றும் அண்ணாமலை புராணம் கூறுகிறது.
அரனடி போற்றி மலைவலம் வருவோம்!
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen