சிவாலயங்கள் பலவுக்கும் சென்று பதிகம்பாடி இறைவனை தரிசித்து வந்த திருஞானசம்பந்தர், திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்தார். வழியில் அகத்திய காவிரி என்னும் வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சம்பந்தரால் ஆற்றைக் கடந்து திருக்களம்பூர் செல்ல முடியவில்லை. பின்னர் ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், தன் அடியவர்களுடன் ஏறிய திருஞானசம்பந்தர் பஞ்சாட்சரம் கூறினார். பின்னர் ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த முயன்றார்.
அந்த கரையிலேயே ஈசன், உமையுடன் இடப வாகனத்தில் தோன்றி சம்பந்தருக்கும், அவரது அடியவர்களுக்கும் காட்சி கொடுத்தார். அந்த அற்புத காட்சியைக் கண்ட சம்பந்தர், மீதி பதிகத்தையும் பாடியபடி திருக்களம்பூர் ஆலயம் நோக்கிச் சென்றார். இதற்கிடையில் அர்த்தஜாம பூஜையை செய்ய இருந்த அர்ச்சகர்களிடம், அசரீரியாக ஒலித்த ஈசன், ‘என் பக்தன் சம்பந்தன் வந்து கொண்டிருக்கிறான். எனவே அர்ச்சகர்கள் அனைவரும் திருஞானசம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர்.
இதற்குள் அர்த்தஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்டது. சம்பந்தர் ஆற்று வெள்ளத்தைக் கடந்து திருக்கோவிலை அடைந்த போது அதிகாலை வந்து விட்டது. இதையடுத்து அதிகாலையில் நடைபெறும் உஷத் கால பூஜையின்போது, முன்தினம் நள்ளிரவில் நடைபெற வேண்டிய அர்த்த ஜாம பூஜையை அர்ச்சகர்கள் செய்தனர்.
அன்றைய தினம் ஐப்பசி மாத அமாவாசையாகும். அதாவது தீபாவளி அன்று நள்ளிரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜை, தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் நடைபெற்றது. இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக இந்த பூஜை, அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருஞானசம்பந்தர் திருக்களம்பூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும் வகையில், தனி விழாவாக ‘ஓடத் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற காலம் தவறிய பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், நம் வாழ்வில் நமக்கு தேவைப்படும் அனைத்து ஐஸ்வரியங்களும் தவறாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
கோவில்:
வெட்டாற்றின் கரையில் ‘நம்பர் கோவில்’ என்னும் ‘சம்பந்தர் கோவில்’ அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள கிராத மூர்த்தி பிரசித்தம். தொடர்ந்து ஐந்து பவுர்ணமியில் இந்த ஆலயம் வந்து கிராத மூர்த்தியை நெய் தீபமேற்றி வழிபட்டால் எதிலும் வெற்றி வாகை சூடலாம்.
ஓடத்தில் வந்திறங்கிய திருஞானசம்பந்தரையும், அவரது அடியார்களையும் ஈசனும், உமையாளும் வரவேற்ற இடம் நம்பர் கோவில். கிழக்கு நோக்கிய மூலவர் வில்வ வனநாதரையும், தெற்கு நோக்கிய அம்பாள் ‘அழகுநாச்சி’ என்னும் சவுந்திர நாயகியையும் தரிசனம் செய்யலாம். இத்தல விநாயகருக்கு ‘காரியசித்தி விநாயகர்’ என்று பெயர். இவரது துதிக்கை வலது பக்கமாக சுழித்தபடி உள்ளது. இவரை சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்கிறார்கள்.
கோவிலுக்கு வெளியே தெற்கு வீதியில் ‘பசுமடம்’ உள்ளது. இங்கு நடைபெறும் கோ–பூஜையில் அதிகாலை வேளையில் கலந்து கொண்டால், நாக தோஷங்கள், பெண் சாபங்கள், பிதுர் தோஷங்கள் அகலும். வெட்டாறு, பிரம்மதீர்த்தம், அர்ச்சுன தீர்த்தம், அகத்திய தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் இங்கு உள்ளன.
ஆலய உட்பிரகாரத்தில் பல சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. திருக்களம்பூரில் இறப்பவர்களுக்கு, சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தை வலது செவியில் ஓதி முக்தி அளிப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே இத்தலத்திற்கு ‘பஞ்சாட்சரபுரம்’ என்ற பெயரும் உண்டு.
0 Kommentare:
Kommentar veröffentlichen