கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் ஐப்பன் கோடி அர்ச்சனை

ஸ்ரீமத் பாகவதத்தில் பிருது மன்னனைப் பற்றிய ஒரு தகவல் உண்டு. சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகவே உதித்தவர் அவர். அவர் அவதரித்தபோது பூமியில் பஞ்சமும் பட்டினியும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. மக்கள் அடிப்படை தேவைகளுக்கே வழியில்லாமல் கிடந்தனர். பசுவிற்குள் இருக்கும் பாலாக, பூமிக்குள் ஒடுங்கியிருக்கும் அனைத்தையும் பகவானின் அம்சமான பிருது மன்னன் கறந்து அளித்தான்.
எப்போதெல்லாம் வழிபாடு தர்மங்களுக்குரிய ஹோம, யாகங்கள் குறைந்து இறைவனை அர்ச்சித்தல் என்கிற செயலில் தொய்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பகவானே அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதை பிருது மன்னனின் கதை விளக்குகிறது.


அவர், அர்ச்சனை ரூபமான தர்மத்தை கையாண்டு பூமியிடமிருந்து சகல செல்வங் களையும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். எனவே அவருக்கு ‘பூமியைக் கறந்த பிருது மன்னன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இப்படியாக அர்ச்சனை, ஹோமங்கள் மூலமாக அவர் அள்ளிக் கொடுத்ததால், மகாலட்சுமி அம்சமான அவருடைய மனைவிக்கு அர்ச்சிஸ் என்கிற பெயர் வந்தது. இந்த திவ்ய தம்பதியினர் ஆதியில் உலகிற்கு காட்டிய தர்மமே அர்ச்சனை எனும் உயர்ந்த விஷயமாகும். அந்த மிக உயர்ந்த தர்மமானது இப்போது கோடி அர்ச்சனையாக கலியுகக் கடவுளான ஸ்ரீ ஐயப்பனுக்கு சென்னை - நங்கநல்லூர் தலத்தில் செய்யப்படவிருக்கிறது என்பது நம்முடைய பெரும் பாக்கியமாகும்.


1990ம் ஆண்டு விளக்கு பூஜைக்காக ஐயப்பனுடைய விக்ரகத்தை பம்பையில் ஆராட்டு நடத்தி ஐயனின் 18 படியேறி, அதற்கு சந்நதியிலுள்ள விபூதி சாத்தப்பட்டது. பிறகு 1995ம் வருடம் ஐயப்பனுக்கு கோயில் கட்ட அஷ்டமங்கள பிரசன்னம் பார்த்ததில் இக்கோயில் 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்புறம் அமையுமென்று கணிக்கப்பட்டது. அதன்படி ஐயப்பனின் திவ்ய விக்ரகம் ஐயனின் சங்கல்பத்தாலும், பேரருளாலும் நன்முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே இன்று ஸ்ரீசபரி சைதன்ய க்ஷேத்திரம் என்றழைப்படுகிறது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், சபரிமலையிலுள்ள சந்நிதானத்தின் நடையை அடைத்தபின் இத்தலத்தில் இருந்தும் ஸ்ரீ ஐயப்பன் அருள்பாலிக்கிறார் என்று பிரசன்னத்தின்போது அறியப்பட்டது.


இப்பேற்பட்ட அரியதும் அபூர்வமான இந்தக் கோயிலில் உலக நலனை முன்னிட்டும் குருசாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும் ஆங்காங்கு இருக்கும் ஐயப்பனின் பக்த குழுக்கள் அனைத்தும் இணைந்து ஒரு கோடி அர்ச்சனை வைபவத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த அற்புத கோடி அர்ச்சனை வைபவம் 7.12.2013 முதல் 22.12.2013 வரை நங்கநல்லூர் 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீசபரி சைதன்ய க்ஷேத்திரம் எனும் இக்கோயிலில் நடத்தப்பட உள்ளது. அதிலும் ஸ்ரீஐயப்பனுக்கு மிகவும் உகந்த மண்டல பூஜை காலமாகிய கார்த்திகை - மார்கழி மாதங்களில் நடைபெறுவதென்பது ஐயப்ப பக்தர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.

Get this gadget at facebook popup like box
09