கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

வாழ்வில் இருளை அகற்றி ஒளியேற்றும் தீபாவளி திருநாள்!

இந்துக்களின் பண்டிகைத் திருநாளாக தீபாவளியை கொண்டாடுகிறோம். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா நரகாசுரன் எனும் அரக்கன் உயிர்களுக்கு கேடு விளைவித்ததால் அவனை அழித்து உயிர்களை துன்பத்திலிருந்து மீள அருள் செய்தார்.


தீமைகள் விலக நன்மைகள் புரிந்து இருள் அகற்றி எங்கும் ஒளி பெறச் செய்த நன்னாளில், மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் எமக்கு எப்பொழுதும் கிடைக்கவேண்டும் என்றே அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

புராணங்கள் கூறுவதும் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகள் படியும் பார்த்தால் கொடுமையான அரக்கன் ஒருவனால் அல்லல் உற்றவர்களுக்கு கிருஷ்ண பகவான் திருவருளால் விடுதலை கிடைத்த மாபெரும் தினம் இத்தீபாவளித்திருநாள். அரக்கன் அழிந்தான். கொடுமை இருள் அறியாமை மறைந்தது. ஒளியாமை பிறந்தது. ஆம் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மானிட வாழ்வில் அரக்க குணத்தை விட்டொழித்து நற்குணங்களை தம்மனதில் நிலை நிறுத்தி அறிவு பரப்பிட குறைவில்லாது நிறைவுடன் வாழத்தொடங்கினர். இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து சிறப்புடன் வாழ அறிவுக் கண்களை திறந்து ஒளி பெறச்செய்தனர். இப்படி அன்று இந்நாளில் கொண்டாடியதை இன்றும் அது வழமையாய் தீபாவளிப் பண்டிகை அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதி அன்று கொண்டாப்படுகிறது.

நரக சதுர்த்தசி அன்று நரகாசுரன் அழிந்ததால் மக்கள் துன்ப இருள் நிங்கியது என ஒளி தீபம் ஏற்றி இல்லங்கள் எங்கும் ஒளி ஏற்றினர். வெற்றி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். அக அழுக்கு, புற அழுக்கு எல்லாம் போக்கி எண்ணெய் தேய்த்து, அதிகாலையில் நீராடி புத்தாடை அணிவர். பின் கவலை மறந்து ஆடிப்பாடி உறவினர்கள் அனைவருடனும் திண்பண்டங்கள், பழங்கள், என விருந்து உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். துன்பம் போக்கிய அந்த கிருஷ்ணபகவானை வாழ்த்தி துதி செய்து மகாலஷ்மியை நிணைந்து அழகுகோலம் இட்டு, வீட்டை அழகு படுத்தி விளக்கேற்றி லஷ்மி பூஜை செய்து வழிபாடாற்றினர். "தம ஸோ மா ஜ் யோதிர் கமய" அதாவது இருளில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல் என்ற வேண்டுதல் உணர்வோடு விளக்கேற்றுவது; கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி பூமாலைகள் தொங்க விட்டு வீட்டை நேர்த்தியாக அழகுபடுத்துவது. இப்படி நமது காலாச்சாரத்தை வளர்த்து இறை உணர்வினை ஊட்டி
ஒற்றுமை மேலோங்கிடச் செய்தனர்.

நமது புராணங்களில் இத் தீபாவளித் திருநாளுக்கு பலவிதமான கதைகள் கூறப்படுகிறது. விஸ்ணு புராணமும் ஸ்ரீமத்பாகவதமும் ஒரேமாதிரியாக குறிப்பிட்டுச் சொல்கின்றன. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது "ப்ருகு" முனிவரின் மகளாகிய ஸ்ரீலட்சுமி பதினான்கு இரத்தினங்களில் ஒன்றாக கொண்டாள். அவள் வடிவம் 'தூயஸ்படிகமணி' போன்ற பேரெழில் கொண்டு கையில் தாமரை மலருடனும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருந்தபடி ஆழ்கடலில் இருந்து வெளிப்பட்டாள். அவளை அபிஷேகித்து ஆராதித்து தேவர்களனைவரும் மகாவிஸ்னுவுக்கு அர்ப்பணித்தனர். அவரும் அவளுக்கு தனது இதயத்தில் இடமளித்து மார்பில் அமர்த்திக் கொண்டார்.

செளகந்தர்ய புராணத்தில் கூறப்பட்ட விதம் வேறு. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து பெறப்பட்ட  இரத்தினங்களும் இதர பொருட்களும் சரிவர பிரிக்கப் படாததால் அசுரர்கள் அரசன் 'பலிக்கு' மனக்குறை. அதனால் இரத்தினங்களில் மகாலட்சுமியை அங்கிருந்து அபகரித்து ஒரு இருட்சிறையில் அடைத்து வைத்து விட்டான். அதோடு மட்டுமல்லாது தேவர்களை துன்புறுத்தியும் வந்தான். தேவர்கள் சிவன், பிரம்மா இருவரிடமும் சென்று இதற்கு என்னவழி எனக்கேட்க அவர்கள் விஷ்ணுவிடம் முறையிடுமாறு கூறியதைக் கேட்டு, விஷ்ணுவிடம் குறை களைந்து லட்சுமியை மீட்குமாறும் அவளை ஏற்றுக்கொள்ளவும் வேண்டி நின்றனர்.

பலிமன்னன் தான தர்மர்மங்கள் செய்வதோடு மட்டுமல்லாது மிருத்யுஞ்ச வரமும் பெற்றிருந்தான். அதனைக் கருத்தில் கொண்ட  மகாவிஷ்ணு வாமன உருவம் தாங்கிப் (குள்ள உருவம்) பலி மன்னனிடம் சென்றார். அங்கு அவன் பித்ரு பூஜை செய்யும் சமயத்தில் மூன்றடி மண் நிலத்தை தானமாகப் பெற்று அதை தந்திரமாகக் கையாண்டார். ஓரடி பூலோகத்தையும், ஈரடி பதினான்குலோகங்களையும், மூன்றாவது அடி அவன் தலையிலும் கால் வைத்து அவனை அழித்து இலட்சுமியை மீட்டார். பலி மன்னனும் லட்சுமி என்றும் பூமியில் இருக்குமாறு விஷ்ணுவிடம் வேண்டினான். அதற்கு விஷ்ணுவும் முற்றிலும் இங்கு இருந்திட முடியாது என்று கூறிவிட்டு யார் வீட்டில் ஜப்பசி மாதக் கிருஷ்ணபட்சத் திரயோதசி முதல் அமாவாசை வரை தீபங்கள் ஏற்றி அலங்கரித்து லட்சுமி பூஜை நடத்தப்படுகிறதோ அவர் வீட்டில் அந்த வருடம் முழுவதும் ஸ்ரீலட்சுமி வந்து தங்கி வாசம் செய்வாள் என்றார். அதன்படித் தான் தீபாவளியன்று நாம் தீபங்களை ஏற்றி எங்கும் மங்கலம் பொங்க மகிழ்வுடன் காத்தல் கடவுள் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வணங்குகிறோம்.

தீபாவளியின் பொருள் தீபம்+ ஆவளி அதாவது தீபங்களின் வரிசை ஆகவே தீபாவளித் தினத்தில் நமது கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது ஆகும். இத்தீபத் திருநாளில் வரிசையாக நேர்த்தியாக கோலங்கள் அழகுடன் மாவினால் வரைந்து நிறமூட்டி தீபங்களை ஏற்றி அதன்மேல் அழகு படுத்தி வைத்து மகிழ்வுடன் கொண்டாடுவோம். தீபத்திலிருந்து வெளிப்படும் ஒளி இருளைப்போக்குவது போல் எமது உயிரோட்டத்தின் அடையாளமாக விளங்கும் ஒளிர்கின்ற தீபங்களை நாம் துதிப்பது நமது உள்ளொளியைப் பெருக்கி அக இருளைப்போக்க வல்லது என்பது நமது நம்பிக்கை. ஒளிரும் ஜோதி நிரந்தர முன்னேற்றம் தரவல்லது. ஆகவே இன்நாளில் நீராடி திருநீறு பூசி புத்தாடை அணிந்து ஆலயம் சென்று வழிபாடாற்றி பெரியோரை வணங்கி ஆசி பெற்று ஒழுக்க நெறிகளோடு வாழ அறிவுக்கண்களை திறந்து நல்லொளி பரப்பி நன்மைகளை நினைத்து நல்லதை செய்வோம். அன்போடும் பண்போடும் வாழ்வோம். தமிழர் வாழ்வில் இருள்  அகன்று ஒளி வீச தீபாவளியை கொண்டாடுவோம்.

Get this gadget at facebook popup like box
09