கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

சைவத் தமிழ்த்திருக் கோவில்களின்; கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு – புதிய தொடக்கத்தின் ஆரம்பம்! பூமிபுத்ரன்

உரிமைகளுக்கான மனுக்குலத்தின் போராட்டம் ஆண்டான் - அடிமை சமூகத்தில் இருந்தே இடையறாது தொடர்ந்து வருகின்ற ஒன்று.
உரிமைகளைத் தெரிந்து கொள்வதில், தமது நியாயாமான உரிமைகள் மறுக்கப் படுகின்றன எனப் புரிந்து கொள்வதில் ஏற்படுகின்ற தாமதம் சில வேளைகளில் உரிமைகளுக்கான கோரிக்கைகளை, அவற்றை அடைவதற்கான
போராட்டத்தைத் தாமதப் படுத்துகின்றனவே தவிர, உரிமைகளுக்கான போராட்டம் உலகின் சகல மூலைகளிலும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் சுதந்திரத்தை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது உள்ளடக்கத்தில் சமூகத்தின் அனைத்துத் தளைகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்து இருப்பதைக் காணலாம். சமூக விடுதலைக்கான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போது, அப் போராட்டத்தின் மைய சக்தியான மக்கட் கூட்டம் தம் மீது சுமத்தப்பட்டுள்ள தளைகளைக் கண்டறிந்து அவற்றை உடைப்பதற்கான போராட்டத்தையும் விரைவு படுத்துகின்றது.
ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் இது விடயத்தில் விதி விலக்கானதல்ல. சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனும் பாரிய இலக்குடன் உருவான இந்தப் போராட்டம், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்குமுறை, பெண் அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளிலும் இருந்து தமிழ்ச் சமூகம் விடுதலை பெற்றாக வேண்டுமென்ற புரிதலையும் உருவாக்கி இருந்தது.

இன அடிப்படையிலான விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவுகளுள் ஒன்றான அதீத இன உணர்வு, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை நாடு கடந்தும் ஏற்படுத்தி விட்ட நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஏதோவொரு விதத்தில் தாம் ஒற்றுமைப் பட்டவர்களாக உணரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு அங்கமாகக் கடந்த காலத்தில் மனுக்குல வரலாற்றில் தமிழ் இனம் கொண்டிருந்த வரலாற்றுப் பாத்திரம் தொடர்பான புதுப்புது ஆய்வுகள், கண்டு பிடிப்புக்கள் தினம்தினம் வெளிவந்த வண்ணமேயே உள்ளன.

தமது இனத்தின் உன்னத இருப்பு மட்டுமன்றி, அந்நியரினால் தமிழ் இனத்தின் மீது திணிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெற்றி பெற்ற இனம், தோல்வியுற்ற மக்கட் கூட்டத்தின்மீது திணிக்கும் விடயங்கள் காலப்போக்கில் 'பழகிப் போவது" மரபு. அவ்வாறு தமிழ் இனத்திலும் 'பழகிப் போன" பல விடயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்து ஆலயங்களில் சமஸ்கிருத மொழியில் நடைபெற்று வருகின்ற பூசைகள் பற்றியது.

தமிழ்த் திராவிடர்கள் மீது ஆரியர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் விளைவாக அறிமுகமான சமஸ்கிருதமும், வருணாச்சிரம தர்மம் முன்மொழியும் சாதியமும் இந்து மதம் தமிழர்கள் மீது திணித்த ஆரிய ஆக்கிரமிப்பின் விளைவுகளாகும். நூற்றாண்டுகள் பல கடந்தும் இந்த அடிமைத் தளைகளில் இருந்து விடுபட வழியின்றித் தமிழினம் தத்தளித்து வருகின்றது.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய ஒளி காரணமாக, இந்து மத வழிபாட்டு முறைமை தொடர்பிலும் புதிய தேடல்கள் இடம்பெற்றன. அதன் விளவுகளுள் ஒன்றாக 'கடவுளுக்கு விளங்கும் மொழியான சமஸ்கிருதத்தை" விட்டுவிட்டு மனிதனுக்கு (தமிழனுக்கு) விளங்கக் கூடிய மொழியான தமிழில் பூசை செய்ய வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழத் தொடங்கின. வீர சைவ வழிபாட்டு முறைமை ஏற்கனவே தமிழ் மொழியிலான வழிபாட்டு முறையைக் கொண்டிருந்த போதிலும், ஆகம வழிபாட்டு முறைமையைக் கொண்டுள்ள இந்துக் கோவில்களில் அந்தணர்களைக் குருவாகக் கொண்ட சமஸ்கிருத வழிபாட்டு முறையே தற்போதும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது.

பிராம்மணிய ஆதிக்கத்தின் இறுக்கமான பிடியில் சிக்குண்டுள்ள தாய்த் தமிழகத்தில் 'கருவறையில் தமிழ்மொழியில் வழிபாடு" என்ற குரல்கள் அவ்வப்போது எழுந்தாலும் அவை அடங்கிப் போய் விடுகின்றன. அல்லது அடக்கப் படுகின்றன. சாதிய அடிப்படையில் பிராமணர் அல்லாதோரின் ஆட்சி இருந்த போதிலும், ஆள்வோர் பிராம்மணிய சிந்தனையையே கொண்டிருப்பதாலும், ஆளும் வர்க்கம் பிராம்மணியமாக இருப்பதாலும் தமிழில் வழிபாடு என்ற குரல் நமத்துப் போகச் செய்யப் படுகின்றது.
ஆனால், பிராம்மணிய ஆதிக்கம் குறைந்த ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர் மத்தியிலும் 'கருவறையில் தமிழ்மொழியில் வழிபாடு" என்ற கோரிக்கை வலுப் பெற்று தற்போது செயல் வடிவம் கண்டு நிற்கின்றது.

ஆண்டவனைத் தமிழி;ல் வழிபாடு செய்வதுவும், பிராமணர் அல்லாத ஏனையோர் பூசை செய்வதுவும் புலம்பெயர் நாடுகளில் பழக்கத்தில் உள்ள விடயங்களே. ஆனால், அதனைப் பொதுமைப்படுத்தி, ஒரு இயக்கமாக மாற்றி, அனைத்துலகப் பிரகடனமாக, ஒரு வேண்டுகோளாக வெளியிட்டிருக்கின்றது சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் அமைந்துள்ள ஞானலிங்கேச்வரர் ஆலயத்தை நிர்வகிக்கும் சைவநெறிக் கூடம் நிர்வாகம். வெறுமனே பிரகடனமாக மாத்திரம் அறிவித்துவிட்டுப் போகாமல் சாத்தியமான அளவு புலம்பெயர் தேசத்துக் கோவில்களிலும், ஈழ தேசத்துக் கோவில்களிலும் அதனை நடைமுறைப் படுத்தவும் அந்த நிர்வாகம் முனைந்து நிற்கின்றது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

மதங்கள் தேவையா, ஆலயங்கள் அவசியமா என்ற கேள்விகளுக்கு அப்பால், உள்ள நிலைமையில் இருந்து ஒருபடி மேலே செல்லுதல் என்ற அளவில் இந்தப் பிரகடனம் புரட்சிகரமானது என்பதை மறுக்க முடியாது. அது மாத்திரமன்றி, இத்தகைய செயற்பாட்டின் ஊடாக இந்து சமயத்தின் உளுத்துப் போன சித்தாந்தமான வருணாச்சிரம தர்மமும் உடைத்தெறியப் படுகின்றமையும் நோக்கத் தக்கது.
உலகளாவிய ரீதியில் புரட்சிகளின் போது அதன் தாங்கு சக்தியாக விளங்கும் இளைஞர்களே இங்கும் இந்தப் பிரகடனத்தையும் வெளியிட்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தாய்மொழியில் வழிபாடு எனும் கலகக் குரல்கள் மதங்களைப் பொறுத்தவரை புதிதான விடயமல்ல. அரசியல் கருவிகளாக மதங்கள் நிறுவனமயப் படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இத்தகைய குரல்கள் பல மதங்களிலும் எழுந்திருக்கின்றன. பல போரட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கணக்கற்ற குருதி சிந்தப் பட்டிருக்கிறது. 'மிகவும் நாகரீகமான மதம்" என வர்ணிக்கப் படுகின்ற கத்தோலிக்க மதத்தில் கூட ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இத்தகைய குரலை எழுப்பியோர் கொன்றொழிக்கப் பட்டுள்ளார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னரேயே லத்தீன் தவிர்ந்த ஏனைய மொழிகளில் கத்தோலிக்க தேவாலயங்களில் பூசை செய்வதற்கு கத்தோலிக்க உயர் பீடமான வத்திக்கான் அனுமதி வழங்கியிருந்தது. இந்த 'உரிமையைப்" பெறுவதற்கான போராட்டத்தில் பலர் உயிரை விட்டுள்ளார்கள் என்பது சரித்திரம்.

இந்து சமயத்தைப் பொறுத்தவரை, வீர சைவ வழிபாட்டு முறைமையைக் கொண்டுள்ள ஆலயங்களிலும், கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தற்போது தமிழில் வழிபாடு நடைபெற்று வருகின்ற போதிலும், ஆகம வழிபாட்டு முறைமையைக் கொண்டுள்ள ஆலயங்களில் இன்றுவரை பிராமணர்களால் சமஸ்கிருதத்திலேயே பூசை செய்யப் பட்டு வருகின்றது.

ஆலயங்கள் முன்னாளில் மன்னர்களாலும், பின்னாளில் அரசுகளாலும் நேரடியாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலை தற்போது தளர்ந்துள்ள சூழலில் தமிழில் பூசை என்பது சாத்தியமான ஒன்றே. அதனை நடைமுறைப் படுத்துவதும் பிராமணர்களைச் சம்மதிக்க வைப்பதும் ஆலய அறங்காவலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் தேசத்தில் இதனை நடைமுறைப் படுத்துவது தாயகத்தைவிட இலகுவானது. அதற்கான அத்திவாரத்தை பேர்ண் ஞானலிங்கேச்வரர் ஆலய நிர்வாகிகள் இட்டிருக்கின்றார்கள். ஆலய அறங்காவலர்கள் மனது வைத்தால் ஈழத் தமிழர்களின் சாதனைப் பட்டியலில் 'உலகெங்கும் உள்ள சைவத் தமிழ்த்திருக் கோவில்களின்; கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு" என்பதுவும் இடம் பிடிக்கும்.

Get this gadget at facebook popup like box
09