மும்மூர்த்திகளும் அளவற்ற கோபமடைந்து அக்னியாய்த் தகித்தனர்.
இக்கோபத்தின் ஒளிப்பிழம்பே மகாலட்சுமி. இவள் போய் மகிஷனை மாய்த்தாள். தேவர்களின் தொல்லையை தேய்த்தாள். தேவி பாகவதம் என்ற புராணம் இந்தச் சரடைவிட்டுள்ளது.
மகிஷாசுரமர்த்தினி, தேவி, லட்சுமி, மகாலட்சுமி என்றெல்லாம் பூஜிக்கப்படும் தெய்வமும் இவளே! இவள்தான் ஒரு பிறப்பில் சீதையாக இருந்தவள்.
பூர்வஜென்மத்தில் குசத்துவர் என்ற முனிவர் வேதம் ஓதிக் கொண்டிருந்தாராம். அவ்வாறு வேதம் ஓதிக்கொண்டிருக்கும்போது அவரது வாயிலிருந்து பொத்தென்று இவள் பிறந்த கதை ஒன்று (அபிதான சிந்தாமணி-பக்கம் 673) உண்டு. இதனால் வேதவதி என்ற பெயருக்கும் இவள் சொந்தக்காரியானாள்.
குசத்துவன் என்ற முனிவன் பிரம்மனைப்போல் அயோக்கியனாக இல்லை; வேதவதியாகிய லட்சுமியை கன்னி கழிக்காமலேயே கண்ணியமாக வளர்த்து வந்தான். தங்கப்பதுமையாய் வளர்ந்து வந்தவளிடம் மனம் பறிதந்தவன் தம்பன் என்பவன்; இவன் ஒரு அரக்கனாம். இவன் கடவுள்களைப் போல லட்சுமியை நகர்த்திப் போகாமல் நேர்மையாக வளர்த்தவனிடம் போய் பெண் கேட்டான்; அவன் தரத் தயாராக இல்லை; தம்பன் அந்த முனிவனை சாகடித்து விட்டுப் போய்விட்டான். வளர்த்தவனும் இல்லை. வளர்ப்பவனும் இல்லை. இந்நிலையில் தன்னை சுவைப் பவனாகவாவது ஒருவன் தேவையென முன்ஜென்மத்துப் புருஷன் விஷ்ணுவை நினைத்துத் தவஞ்செய்தாள்.
அப்போது அப்பக்கமாய் வந்த இலங்கை வேந்தன் இராவணன் இவளிடம் வந்தானாம்; தொட்டு இழுக்க லட்சுமி ருத்ர தேவதையாய் உருவெடுத்தாள். நீ தீண்டிய உடலை இனிமேல் என் உயிர் தாங்காது; நானே உன்னை அழிக்கிறேன்! இதற்குமுன் அக்னியில் அழிகிறேன் என்று சவாலும் சாபமுமாய் தீக்குளித்தாள்.
அதன் பின். . .
இவள் இலங்கையில் தாமரைத் தடாகம் ஒன்றில் அலர்ந்து மலர்ந்த தாமரையில் பிறந்தாளாம் . இவள் இருந்தால் ஆபத்தென அஞ்சிய இராவணன், லட்சுமியை பெட்டியில் வைத்துக் கடலில் விட்டான்; அலையில் மிதந்த லட்சுமியைத் தாங்கிய பெட்டகம் வெள்ளப் பெருக்கில் தடுமாறி மிதிலை நகர் மண்ணில் புதைந்து கொண்டது. மிதிலை நகர மன்னவனான ஜனகன் யாகத்தின் பொருட்டு நிலத்தை உழுதான். உழுத நிலத்திலிருந்து அழுத குரல் கேட்டு பெட்டியைத் திறந்தால் மூக்கும் முழியுமாக ஒரு குழந்தை; எடுத்தான்; வளர்த்தான் ஜனகன், சீதாப்பிராட்டி இவள்தான். ஜானகி என்பவள் இவள்தான். கற்பின் கனலாகக் காட்டப்படுபவளும் இவள்தான். இப்படியாக நீள்கிறது இவளின் பிறவி லட்சணங்கள்!
(ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 673)
கேட்க விரும்புகிறோம் சீதாராம தாசர்களை!
1. எருமையை ஒருவன் புணர்ந்தான்; அதில் அவன் இன்பத்தை
உணர்ந்தான்! பெற்றான் ஒரு பிள்ளையை அது தேவர்களுக்குத்
தந்தது தொல்லையை! எருமை -அசுரப் புணர்ச்சியில்
எருமையின் உருவுக்கு எதுவுமின்றி அசுரனுக்கு மட்டும் வாரிசு
கிடைத்தது எப்படி?
2. மும்மூர்த்திகளும் நினைத்த மாத்திரம் கிள்ளியெறியக்
கூடிய ஒரு அற்பனை அழிக்கப் புதிதாக ஒரு பெண்
தெய்வத்தை உருவாக்க வேண்டுமா? -தங்கள் திறமையில்
தங்களுக்கே நம்பிக்கையில்லாத சோதாக்களா மும்மூர்த்திகள்!
3. வேதம் ஓதம் வாயில் வேதவதி பிறக்கமுடியுமா?
4. ஒருத்தி மீது மையல் கொண்ட மாத்திரத்தில் எப்படியாவது
காரியம் சாதிக்கும் கடவுள்கள் நடுவே முறைப்படி பெண்
கேட்க அரக்கன் தம்பன் போயிருக்கிறான். அப்படியானால்
கடவுள்களைவிட அரக்கர்கள் எனப்படுவோர் யோக்கியர்கள்
தானே!
5. லட்சுமி தவம் செய்வதோ விஷ்ணுவை நினைத்து , வந்தவனும்
வம்புக்கிழுத்தவனும் ராவணன்.
அப்படியானால் ‘தவ வலிமை’என்பதெல்லாம் தகிடுதத்தமா?
தற்குறித்தனமா?
6. பெட்டியில் மூடிய குட்டி உயிர் நிலத்தில் புதைந்தும் நோகாது
சாகாது எப்படி இருந்தது?