நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களுக்கும்; திதிகளுக்கும் தனி சிறப்பு உண்டு.
அமாவாசை தினத்தை அடுத்து வரும் திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய மகிமைமிக்கதிருநாள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ”அக்ஷ்ய திருதியை” என போற்றப்படுகிறது. "அக்ஷ்யம்" என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (அட்சயம்- தேயாது எதிர் கருத்துள்ள சொல், சயம்-தேய்தல்). ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள்.
மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது 'சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடுழி காலம் வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும்.
இந்த வருடம், சித்திரை மாதம் 8ம் நாள் (21.4.15) செவ்வாய்க் கிழமை அட்சய திரிதியை திருநாளாகும். அன்று 36 நாழிகை 06 விநாடி வரையிலும் திரிதியை திதி இருக்கும். அதாவது இரவு 8:29 மணி வரை இருக்கும். சூரிய உதயம் காலை 6:00 முதல் இரவு 8:29 மணிக்குள் புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரம்.
அக்ஷ்ய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.
அதனால்தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.
பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது.
எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அக்ஷ்ய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.
அட்சய திருதியையில் அமைந்த நிகழ்வுகள்:
பகவான் கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார். கிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பகவான் அவர் அன்போடு கொண்டு வந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு, அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து "அட்சயம் உண்டாகட்டும்" என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்!
வட இந்தியாவில் இந்நாளை ”அகஜித்” என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.
தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி - பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான்.
அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.
துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அதுவும் பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்றால் சும்மாவா? மனம் வருந்திய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாத வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை சூரிய பகவான் திரௌபதிக்கு வழங்கி ஆசீர்வதித்தார் என கூறுவாருமுளர்.
இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.
அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள் :
”பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்” என்பது ரமணர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும்.
மேலும் மேலும் தான தர்மங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தி தரும். அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம்.
ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம். கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம். இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகள் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம்.
தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி பாலரிஷ்ட தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம். வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்யலாம். குறிப்பாக, சகல வெற்றிகளும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.
ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை, போர்வை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார். பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கையே தவிர, தங்கம் வாங்கினால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. மேலும், அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி, தங்கம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இப்படி செய்வதால், கடன் வாங்கும் வழக்கம் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால், கிரெடிட் கார்டு தேய்த்து தங்கம் வாங்குவதை தவிர்ப்பது நலம்.
அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.
திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்:
இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க
விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிருதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.
ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத ஸ்ரீலட்சுமி தேவியைப் பூஜிக்க வேண்டும்.
நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.
ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!
* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.
* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.
* காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.
* அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்றால் திருமணம் தான் என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.
அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு: தட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள்.
பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும்? பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா? சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம் ! இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும்? காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும்? ! இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன்
சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான். தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.
நடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன்? வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். விளைவு - பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்புச் சிற்பம் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது.
சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திரும்ப வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே வேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார். அதோடு, மன்மத மதன களிப்பு மருந்து எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இங்கு மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்றொரு திருநாமமும் உண்டு.
தல சிறப்பு: இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
தல பெருமை : திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய ÷க்ஷத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்யலானாள். இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள்.
அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காண இயலாத வகையில் தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்க முடிகிறது. அபயம், வரதம் கூடிய திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காட்சி தருகிறாள் இவள். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
சித்த விரத பூமி: போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷான ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ஞுது வியக்கத்தக்கதாகும். இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம்.
ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ஞு சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பு.
பிரார்த்தனை: தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷிமியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பொது தகவல்: ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.
திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பிடம்: திருச்சியில் இருந்து குணசீலம், முசிறி வழியாக சேலம் செல்லும் பிரதான சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளூர் முசிறிக்குக் கிழக்கே சுமார் 6 கி.மீ.!
நன்றி
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen