கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

முச்செல்வங்களையும் அள்ளிவழங்கும் நவராத்திரி!

அழகு அன்னை அன்பும் கருணையும் கொண்டு எம்மிடம் உறைகின்ற நாளாகிய இந்நாளில், எமக்கு அருள் தரும் தாயாக எம்மை வழிப்படுத்தி, வளப்படுத்தி, வலுப்படுத்தி எதற்கும் எம்மை தயாராகச் செய்பவளாக அருள்பாலித்து வருகிறாள்.




அம்பிகை உலகம் காக்கும் அன்னை. பெற்றெடுத்த அன்னை எம்மைக் குடும்பத்தில் உள்ளவர்களைக் காப்பவளாக இருப்பவள். உலகம் முழுவதிலும் உள்ள உயிர்களை காப்பவளாக அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்கிறாள். ஆகவே இந்நவராத்திரி நாளில் கொலுவைத்து அம்பிகையை எங்கள் வீட்டில் கொலுவிருக்க என்றும் துன்பம் இல்லாது நாம் வாழ்ந்திருக்க, அருள்தர வரவேற்கிறோம்.

இறைவன் அருவம் உருவம் ஆகிய இருநிலைகளில் வீற்றிருக்கிறான். எமக்கு ஒரு செயல் எதுவாக இருந்தாலும் ஒரு நம்பிக்கை பிடிப்புடன் செயல்பட்டாலே ஒழிய அச்செயல் வெற்றி அளிக்காது. அது கற்பதாகட்டும் ,ஈட்டுவதாகட்டும், காரியம் ஆகுவதாகட்டும் எப்படி இருப்பினும் ஒரு சக்தி தேவை ஆகும். அச்சக்தி கொடுப்பது, அருவமாக எமில் மறைந்திருக்கும் இறை சக்தியன்றி வேறுண்டோ. ஆக அருவமாக இருப்பதை உருவத்தில் வைத்து வழிபாடாற்ற உகந்த நாள் இந் நவராத்திரி நாளாகும். சக்தி தருகின்ற சக்திக்கு ஆற்றலைக்கொடு , பொருளைக்கொடு, அறிவைக்கொடு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையின்  அருட்சக்தி கிடைக்கவேண்டுவர். அழகாக மூன்று ,ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று இப்படி படிக்கட்டுக்களை வரிசைப்படுத்தி கொலு வீடுகளிலும், ஆலயங்களிலும், கலைமன்றங்களிலும் வைக்கப்படுவது வழக்கமாகும்.

சிலர் களிமண் உருவில் பொம்மைகள் செய்து வைத்து வழிபாடாற்றுவர். களிமண் உருவில் வழிபடுபவர்களுக்கு அது உணர்வு வடிவம் என்பது புரியவேண்டும். களிமண் கடவுள் அல்ல,அந்த உருவத்தில் இறைவியை நினைத்து வழிபட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு எமக்கு மேலான சக்தி உண்டெண்பதை உணரவைக்க இப்பூஜை வழிபாடுகள் மிக அவசியம், நமக்குள் இருந்து கொண்டு நம்மை நடத்திச் செல்பவர் யார் அத்தாயல்லவா! அழகு பொம்மைகளை அடுக்கி வைத்து அன்னையை வழிபட்டாள் அவள் மகிழ்ச்சியில் ஞானத்தையும், பக்தியையும், வைராக்கியத்தையும், நம்பிக்கையையும், இன்பதையும், போகத்தையும் அள்ளிக் கொடுத்து நாம் பலவித நன்மைகள் அடைய வழிசெய்கிறாள்.

எப்படி பூஜை செய்ய வேண்டும். என்பதை இறைவியே எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளமை பலபுராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு தாய்க்கு தன் குழந்தைகளின் ஜீரணசக்தி பற்றி நன்கு தெரியும். அதற்கேற்பவே அவள் உணவு சமைக்கிறாள். பல குழந்தைகளுடைய தாய்க்கு அவர்களின் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு பலவிதமாக சமையல் செய்து யாருக்கு எது நல்லதோ அதற்கேற்ப சமைக்கிறாள். ஆக உலகாளும் நாயகியும் உயிர்களை வதைக்காது அவர்கள் விரும்பும் வாழ்வை அவருக்கு அள்ளிக் கொடுத்தருள் புரிகிறாள். அப்படிப்பட்ட உண்மையின் உறைவிடமாக வீற்றிருக்கும் உத்தமியை உள்ளன்போடு ஒன்பது நாளும் பூஜை ஆராதனை செய்து பாடிப் பரவி வணங்கவேண்டும்.

வாழ்வில் மனிதர் மூன்று படி நிலைகளைக் கடக்க வேண்டும், குழந்தை, இளைஞன், வயோதிபன் இம்மூன்று நிலை அதைக்கடப்பதற்கு குழந்தையில் கல்விகற்று அறிவைக் கடந்தாகவேண்டும். இளைஞனாக உழைத்து பொருளீட்டி ஆசைகளைக்கடந்தாக வேண்டும். வயோதிகனானதும் நோயிலிருந்தும் மூப்பிலிருந்தும், குடும்பப்பொறுப்பிலிருந்தும் விலக தைரியம்பெற்று போராடி இவற்றைக்கடந்தாக வேண்டும். இதற்கு தாயாய் இருக்கும் அம்பிகையை நவ சக்திகளைத்தரும்படி வேண்டி கருணையுடன் காத்துரட்சிக்கவேண்டும் என பிரார்த்தனை செய்யவது நலம். படிப்படியாக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களைக்கடந்து இறைவியின் பாதத்தை அடைந்து மோட்சம் பெறவேண்டும். அதற்கே கொலுவைத்து படிக்கட்டில் அலங்கரிப்பர். இறைதத்துவத்தை உணரச்செய்து எதிர்காலத்தில் நமது சந்ததியினர் நம்பிக்கை கொண்டு நல்வாழ்வு வாழச் செய்யும் நவநாயகிகளை மெய்யன்போடு வணங்குவோம். கலைகள் யாவும் சித்தியடைய பிரார்த்திப்போம்.

Get this gadget at facebook popup like box
09