கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

விஜய தசமியும், மானம்பூ (வாழை வெட்டு )விழாவும்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி




ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே! இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே! கிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம். எங்களை காப்பாற்றுவாயாக.

விஜய தசமி என்பது, அன்னை துர்க்கைதேவி மகிஷாசுரனை வென்ற வெற்றித் திருநாள். துர்கா பூஜையின் நிறைவு நாள். நவராத்திரி விழாவின் இறுதி நாளான பத்தாவது நாள் (ஒன்பதாவது நாள் என கூறுவாருமுளர்) துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுர மர்த்தினியாகத் தோன்றுகிறாள். தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் இந்தப் பத்தாம் நாள் விஜய தசமி (விஜய - வெற்றி, தசமி - 10ம் நாள்) வெற்றித் திருநாளாக எல்லோராலும் கொண்டாடப் படுகிறது. இவ் விழா இவ்வருடம் 24.10.2012 கொண்டாடப் பெறுகின்றது.
ஒவ்வொருவர் எண்ணத்தில் உதிக்கும் அசுரத்தன்மையான எண்ணங்களை அழித்து ஈடேற்றும் திருநாள். ஒன்பதாம் நாள் படைத்த தொழிற் கருவிகளுக்கு மறு பூஜை செய்து அதைப் பயன்படுத்தினால் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். ஒன்பதாம் நாளன்று படைத்த புத்தகங்களுக்கும் மறு பூஜையிட்டு, அம்பாளை வேண்டிப் புத்தகங்களைப் படிக்க, சரஸ்வதியின் அருள் உடனே கிடைக்கும். இத்தினத்தில் குழந்தைகளைப் பள்ளிக் கூடங்களில் சேர்த்து வித்யாரம்பம் செய்தால் குழந்தைகளுக்குக் கல்வி ஞானம் பெருகும்.

முப்பெருந்தேவிகளான உலக இயக்கத்தின் சக்தியாக, ஆதாரமாக விளங்கும் அன்னையின் அருளாசியுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் நாளாக, வெற்றியின் ஆரம்ப நாளான, விஜயதசமி அமைகின்றது.

பராசக்தியின் வடிவமான அன்னை துர்க்கா தேவியை வழிபட்டால் வாழ்வில் எதிலும் வெற்றிகிட்டும் என்பதால், தாய்மையைப் போற்றி வழிபாடு செய்யும் நவராத்திரி நாட்களான ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு விழாவெடுத்து, விரதமிருந்து வழிபட்டு அருள் நாடித் தொழுகின்றோம். அன்னையரின் ஆசியும் அன்பும் அரவணைப்பும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம்.

இந்த விஜயதசமி நன்னாளானது தாய்மையின் திருவுருவிலே முப்பெருந் தேவியரின் அருள் பெற்று, ஆற்றல் பெற்று வாழ்விலே மனவலிமையும், தன்னம்பிக்கையும், சகல செல்வங்களும், வாழ்வைச் சீரான வழியில் கொண்டு நடத்த நல்லறிவும் நமக்கு நிச்சயம் கிட்டும் என்ற உறுதியை உள்ளத்திலே தாங்கி தளர்வில்லா எதிர்காலத்தை நோக்கி எழுச்சியுடன் அடியெடுத்து வைக்கும் நன்னாளாக, அடித்தளமிடும் நாளாக விளங்குகின்றது.
ஒவ்வொருவரும் தமக்குரிய கடமைகளைச் சீரிய, நேரிய வழியில் ஆற்றுதல் வேண்டுமென்பதை இந்நன்னாளின் தத்துவம் விளக்குகின்றது. "செய்யும் தொழிலே தெய்வம்" என்பது இந்துக்களின் தொன்மை மிகு தத்துவம்.
நவராத்திரி விரத ஆரம்பத்தின் போது செழிப்பை விளக்க நவதானியங்கள் விதைக்கப்படுகின்றன. அவ்வாறு விதைக்கப்பட்ட நவதானியங்கள் இந்த நவராத்திரி நாட்களிலே செழித்து வளர்வது போன்று உலகிலே சகல வளங்களும் பெருகி உயிரினங்கள் யாவும் சிறப்பாக வளமுடன் வாழ வேண்டும் என்பதைக் குறிகாட்டும் வேண்டுதலாக இது அமைகின்றது. தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பெற்று, பயிர்ச் செய்கையின் மேன்மை புலப்படுத்தப்படுகின்றது. இயற்கையின் வளத்திற்குத் தெய்வத்தன்மை தந்து போற்றப்படுகின்றது. இவ்வாறு இயற்கை வளத்திற்குத் தெய்வத்தன்மை தந்து வழிபடுவது இந்துக்களின் பாரம்பரிய சிறப்பாக அமைகிறது.

பத்தாவது நாள் அதாவது விஜயதசமியன்று நவராத்திரியின் தொடக்க நாளில் வைக்கப்பட்ட கும்பத்தின் புனித நீரால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. அத்துடன் விளைந்த நவதானியப் பயிர்கள் பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இந்த தானியப் பயிர்கள் வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அதனால் இது வளமான வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனையாக அமைகின்றது.
நற்செயல்களைத் தொடங்க சிறப்புடைய நாளாகவும் இவ்விஜயதசமி நன்னாள் கொள்ளப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வித்தியாரம்பம் செய்தல், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பித்தல் உள்ளிட்ட சகல நற்காரியங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்நாள் உகந்ததாக அமைகின்றது. இந்நாளில் தொடங்கும் கருமங்கள் தொய்வின்றித் தொடரும், நிறைவேறும், சிறப்படையும் என்பது ஐதீகம்.

இவ் விஜய தசமி நன்னாளுக்கு மேலும் பல சிறப்புகளுள்ளன. அவற்றிலே குறிப்பாக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்திய அன்னை சக்தியின் தோற்றம் காலத்திற்குக்காலம் நிகழும் என்ற தத்துவம், நம்பிக்கை வெளிப்படும் தினமாகவும் இந்நாள் விளங்குகின்றது.
உலகையும், உலக உயிரினங்களையும் வாட்டி வதைக்கும் பல்வேறு துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்படும். என்ற நம்பிக்கையை நம்மனங்களிலே விதைக்கும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது. தாயாக இருந்து உலகைக் காக்கும் அன்னை பராசக்தியைச் சரணடைந்தால் அவள் எம்மை அரவணைத்து, பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையை நம்மிடம் தெளிவுறுத்தும்.

புராணக் கதையாக மகிஷாசுரன் என்ற அசுரனை; அன்னை அழித்த கதை விளக்குகின்றது. மகிஷாசுரன் (மஹி - எருமை) என்ற எருமையின் தலையை உடைய அசுரனின் செயல்களால் உலகம் நிம்மதியிழந்து தவித்த போது அன்னை துர்க்கை தோன்றி அக்கொடிய அசுரனை அழித்து உலகில் நிம்மதியை நிலை நாட்டிய நாளாக விஜயதசமி நன்னாள் விளங்குகின்றது. இந்த விஜயதசமி தினத்திலே அதர்மத்தின் சின்னமாக விளங்கிய மகிஷாசுரனை மர்தனம் செய்து மகிஷாசுரமர்தனி என்ற பெயருக்கும் உரியவளாகின்றாள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு மகிஷாசுரரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முகூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் முதலாக பல கோயில்களில் மானம்பூ (மா + அம்பு) என்ற நிகழ்வு நடைபெறுகின்றது. இதனை “வன்னி வாழை வெட்டுதல்” என்றும் கூறுவர். மகிஷாசுரன் துர்க்காதேவியின் அகோர கோபத்தைத் தாங்க முடியாது வன்னி மரத்தில் மறைந்து ஒழித்திருந்த போதும், அம்மன் அவனைத் தேடிச்சென்று வதம் செய்வதையும் இந்த மானம்பூ என்னும் வாழை வெட்டுதல் நினைவூட்டுகின்றது.
வன்னிமரம் வெட்டுவதற்கு கடினமானது என்ற காரணத்தினால்; ஆலயங்களில் வெட்டுவதற்கு சுலபமான வாழை மரத்தை (கன்னி-குலை போடாத வாழைமரம்) ஆலய வாசலில் நட்டு அதில் வன்னிமரக் கிளைகளை குத்தி, அதனை வன்னி மரமாகவும் அதனுள் மகிஷாசுரன் மறைந்துள்தாகவும் ஆவாகணம் செய்து வாழை மரத்தை வெட்டுவதன் மூலம் மஹிஷாசுரன் சங்காரம் நடைபெறுவதாக ஆலயங்களில் கன்னி வாழை வெட்டும் விழா நிகழ்தப்பெறுகின்றது.

இந் நிகழ்வு  முத்துமாரி அம்பாள் ஆலயம் உள்ளிட்ட எல்லா அம்மன் ஆலயங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும் சிறப்பான விழாவாகும். முப்பெருந்தேவிகளின் திருவருள் கிட்டவும், துன்ப, துயரங்கள் தூரவிலகவும் இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம். உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். அன்னையரின் அருளாசி, அரவணைப்பு வேண்டி அவர்களைச் சரணடைவோம்.

யார் அந்த மஹிஷாசுரன்? புராணம் கூறும் கதைகள்:

வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், பட்டமும், பலமும் கிடைத்துவிட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் தலைக்கனமும், எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் நீ எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டார். இக்காலத்தில்...

தனு என்ற அசுரனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் அக்னி பகவான் தோன்றினார். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பா!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை.
அவனது அசுர புத்தி வேலை செய்யத் தொடங்கியது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் (எருமைத் தலை அசுரனாக) என்னும் பெயருடன் பிறந்தான்.
மகிஷாசுரன்; கடுந் தவம் புரிந்து பிரமதேவனிடம் பெற்ற தவ வலிமையினால் அகந்தை மேலிட தேவலோகத்தையும், பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது. மகிஷாசுரன் தனக்கு ஓர் ஸ்திரியால் அன்றி மரணம் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். தன்னை அழிக்கும் தகுதி உள்ள ஒரு ஸ்திரி சர்வலோகங்களிலும் இல்லை என எண்ணி அவன் கர்வமும், அகங்காரமும் கொண்டான்.

அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக் என்ற மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.

மகிஷாசுரனிடம் தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மகிஷாசுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இறஞ்சி நின்றனர்.

தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்திகளும் மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மகிஷாசுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு ஸ்திரியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு, பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சங்கார மூர்த்தியை" சிருஸ்ட்டித்தார்கள்.
அந்த சங்கார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக உருவெடுத்தாள்.

அதற்கு "துர்கா தேவி" (சண்டிகாதேவி, காளிதேவி எனவும் கூறுவாருமுளர்) என நாமம் சூட்டி ஆசிகளும் வழங்கினர். மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள். மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால் துர்க்காதேவி 
"மகிஷாசுரமர்த்தினி" என்று பெயர் பெற்றாள்.

மகிஷாசுர சங்காரம் சுலபமான ஒன்றல்ல மகிஷாசுரனின் தலை கொய்யப்படும் பொழுது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒவ்வொரு மகிஷாசுரனாக உருவாகும் சக்திகொண்டது. அதனால் துர்க்காதேவி ஒருபாத்திரத்தில் அவன் இரத்தத்தை ஏந்தி அவை நிலத்தில் சிந்தாவண்ணம் தானே அதைப் பருகி மகிஷாசுரனின் சங்காரத்தை நிறைவுசெய்தாள்.

இந் நிகழ்வைக் குறிக்கும் இன்னொரு கதையும் வழக்கத்தில் உள்ளது.
முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவன் இருந்தான். ஆவன் தவவலிமை மிக்கவன் எனினும் ஆணவ மலத்தால் கட்டுண்டு அறிவுக்கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒரு நாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்திமிரால் அகத்தி முனிவரை மதிக்கத் தவறியதோடு மட்டுமின்றி அவமரியாதையும் செய்தான். மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர் வரமுனியை "எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக.” – என சாபமிட்டுச் சென்றார்.

அகத்திய மாமுனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத் தலையும், மனித உடலும் பெற்றான். எனினும் அவனுடைய விடாமுயற்சியால் மீண்டும் கடுந்தவத்தைத் தொடர்ந்து பலப்பல வரங்களைப் பெற்றான். வரங்களை பெற்ற வரமுனி மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். வரமுனி தர்மத்தை மறந்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு இடையூறுகளைச் செய்யத் துவங்கினான். முனிவராக வாழ்வைத் தொடங்கிய அவன், தன் வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். அதனால் அவன் மகிசாசுரன் என அழைக்கப்படலாயினான். “மகிசம்” என்றால் எருமை என்று பொருள். மகிசாசுரன் என்றால் எருமைத்தலையுடைய அசுரன் என்று பொருள்.

மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்திக் கடும் தவம் புரிந்து மகிசாசூரனின் இடையூறுகளை நீக்கி தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தை கண்டு உளம் இரங்கினாள் அன்னை பராசக்தி. மாமுனிவாகள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது, மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள்.

மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வியை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியால் ஒரு பெண்குழந்தை தோன்றியது. அது "லலிதாம்பிகை" என அழைக்கப்பட்டது. அந்தப்பெண் குழந்தை 9 நாட்களில் முழுவளர்ச்சி அடைந்து 10 ஆம் நாள் அன்னை பராசக்தி மறுவடிவாக லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசூரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசூரனை அழித்த 10 ஆம் நாள் விஜய தசமி எனவும், "தசாரா" எனவும் விழா எடுத்து கொண்டாடுகினறர். தசாரா வட-இந்தியர்கள் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும்.

காயத்ரீ - மந்திரம்ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்


கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம்.


பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டுகின்றோம் துர்க்காதேவியே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி

ஓம் சக்தி ஓம்

துர்கை அம்பாள் துதி ஜெய ஜெய தேவி - ஜெய ஜெய தேவி - துர்காதேவி சரணம்
துர்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்து ஓடும்
தர்மம காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்,சர்வ மங்களமும் கூடும்(ஜெய)

பொற்கரங்கள் பதினெட்டும் சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப்பொட்டும் வெற்றிப்பாதையை காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே அவள் ஆதிசக்தி பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய)

சங்கு சக்ரம்வில்லும் அம்பும் அங்குசம்,வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்ப்பாள், திங்களை முடிமேல் சூடி நின்றாள்
சிங்கத்தின் மேல் வீற்றிப்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையற்க்கரசியும் அவளே அங்கயற்கன்னியும் அவளே(ஜெய)


ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்


சுந்தர வதனி சுகுண மனோகரி
மந்தஹாஸ முக மதிவதனி
சந்தனக் குங்கும அலங்கார முடனே
தந்திடுவா யூந்தன் தரிசனமே (ஓம்)

நந்திதேவருடன் முனிவரும் பணிய
ஆனந்த முடனே வந்திடுவாய்
வந்தனை செய்து மாயனயனுடன்
வகையாயூன் புகழ் பாடிடவே (ஓம்)

தங்கச் சிலம்பு சலசலவென்றிடய
தாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட
பொங்குமானந்தமுடன் புவிமேல் விளங்கும்
மங்களநாயகி மகிழ்வாய் வருவாய் (ஓம்)

வேதங்கள் உன்னை வேண்டிப்பாடிட
விரும்பி ஸரஸ்வதி வீணை வாசித்திட
ஸதானந்தமான ஜோதிஸ்வரூபி
ராஜ ராஜேஸ்வரி சரணம் சரணம் (ஓம்)


மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர்.
இத் தேவியரை நவராத்திரி காலத்தில் பக்தி சிரத்தையுடன், மனமாரத் தியானித்து நாவாரப்பாடி,
உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும் (மனத் தையிரியத்தையும்), செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.  


ஓம் சக்தி ஓம்

Get this gadget at facebook popup like box
09