கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

மங்கலமாகும் மாங்கல்ய வரத்தைத் தரும் வரலட்சுமி விரதம் இன்று! (வீடியோ இணைப்பு)

மங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைத்துஇருக்கும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். செல்வ வளம் பெருகும். கன்னிப்பெண்களுக்கு மணவாழ்வு தேடிவரும். எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும்.
விரதம் இருப்போர் பாராயணம் செய்யும் வகையில் லட்சுமி ஸ்தோத்திரம் இங்கு இடம்பெற்றுள்ளது.

* நாராயணனின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமித்தாயே! செல்வத்தை வாரி வழங்குபவளே! நன்மைக்கு இருப்பிடமாய் திகழ்பவளே! உன்னுடைய கடைக்கண்ணால் எங்களுக்கு அருளை வாரி வழங்குவாயாக.

* கருநெய்தல் மலர் போல அழகு மிக்க கண்களை உடையவளே! அரச பதவியும், இந்திர பதவியும் வழங்குபவளே! உன் பார்வையால் எங்கள் வாழ்வு வளம் பெறட்டும்.

* தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக. பார்க்கவ முனிவரின் மகளாக அவதரித்தவளே! திருமாலின் மார்பில் மின்னல் கொடியாய் விளங்குபவளே! உன்னருளால் எங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.

* கடலரசனின் மகளே! எல்லா வளங்களையும் ஒருசேர அருள்பவளே! உன் கடைக்கண் பார்வை எங்கள் மீது பரவட்டும். ஆளுகின்ற தலைமைப் பதவியும், விரும்பிய பொருள் வளமும் எங்களை வந்து அடையட்டும்.

* நாராயணனின் துணைவியே! கார்மேகம் போன்ற அருட் கண்களால் எங்கள் இல்லங்களில் செல்வ மழை பொழியச் செய்வாயாக.

* நாமகளாய் கல்வியையும், பூமகளாய் செல்வத்தையும், மலைமகளாய் வீரத்தையும் வழங்கும் தாயே! நல்ல செயல்களுக்குரிய நற்பலனை வழங்கும் வேத நாயகியே! உன்னை அடிபணிந்து வணங்குகிறோம்.

* தாமரை முகம் கொண்டவளே! சந்திரன், அமுதம் இவற்றோடு பிறந்தவளே! உயிர்களை காப்பவளே! தாமோதரனின் துணை வியே! முப்பத்து முக்கோடி தேவர்களால் வணங்கப்படுபவளே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்.

* மனதிற்கு இனியவளே! ஆடை, ஆபரணங்களைச் சூடி மகிழ்பவளே! நறுமணம் கமழ்பவளே! உன் அருளுக்குத் தகுதியான எங்களுக்கு மஞ்சள், குங்குமம் நிலைத்திருக்க அருள் செய்வாயாக!

செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும்.  வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

புராணக் கதை

பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

Get this gadget at facebook popup like box
09