குருக்ஷேத்திர யுத்தம் மிகவும் உக்கிரமாய் நடந்துகொண்டிருந்தது. பஞ்ச பாண்டவர்களுக்கு நண்பனாய், தத்துவஞானியாய், சிறந்ததொரு வழிகாட்டியாக செயல்பட்டார் பகவான், கிருஷ்ணன்.
எதிரிகளை வெல்வதற்கு நேரடிப் போர் தவிர தந்திர சூழ்ச்சிகளும் அவசியம் என்று அவர்களுக்கு உணர்த்தினார். ‘நியாயங்களைப் புறந்தள்ளிய வர்களை, தர்மத்தை காலடியில் போட்டு மிதித்தவர்களை, கபட நாடகமாடி ஆரம்பகால வெற்றிகளை அநியாயமாகப் பெற்றவர்களை, வஞ்சனையையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வீழ்த்துவதும் தர்மம் சார்ந்ததுதான் என்பது கிருஷ்ணனின் வாதம்.
அதற்கு பாண்டவர்கள் உடன்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம் -குறிப்பாக தர்மர். பொய் கூட அல்ல; மெய்யைப் பொய்யாகச் சொல்லும்படி கிருஷ்ணன் அறிவுறுத்தியதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும் தங்கள் குரு துரோணாச்சார்யாரைக் கொல்வதற்காக இப்படி ஒரு உத்தியைக் கையாள்வது மிகக் கேவலமானது என்று அவர் கருதினார். ‘‘சூதாடுவது மட்டும் தர்மச் செயலா?’’ கிருஷ்ணன் கேட்டார். ‘‘வீர விளையாட்டுகளில் அர்ஜுனனும், பீமனும் துரியோதனாதியர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடினார்களே, அந்த நேர்மை உன் சூதாட்டத்தில் இருந்ததா?
தாயம் எப்படி வேண்டுமானாலும் விழும் என்ற ஊகத்தில், நிச்சயமில்லாத வெற்றியை எதிர்பார்த்து விளையாடும் அந்த சூதாட்டம் நாணயமானதா? பணயம் வைத்துப் பந்தயம் ஆடுவது என்று ஆரம்பித்துவிட்டால், எதிரியின் சொத்துகளை யெல்லாம் தாயத்தாலேயே கைப்பற்றிவிட வேண்டும் என்ற உன் எதிர்பார்ப்பு நியாயமானது தானா? உன்னுடைய உடைமைகள் என்றில்லாமல், தத்தமக்கு என்று தனித்தனி வாழ்வமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்த தம்பிகளையும் பணயம் வைக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ‘அண்ணன்’ என்ற உறவுக்கு அவர்கள் காட்டிய அபிரிமிதமான பாசத்துக்கு நீ செலுத்திய நன்றிக்கடனா இது?
உன்னோடு தம்பிகளையும் வைத்து இழந்துவிட்ட நீ, அப்போது உங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதபடி தனித்துவிடப்பட்ட திரௌபதியையும் பணயம் வைக்க மனு தர்மம் இடம் கொடுத்ததா என்ன?’’ தர்மரால் பதில் எதுவும் பேச இயலவில்லை. நாமறியாமலேயே எத்தனையோ அதர்மங்களுக்குத் துணை போயாயிற்று. அதனால் இப்போதும் சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். இத்தனைக்கும் கிருஷ்ணன், அவர் பொய் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையை, குரலில் ஏற்றத் தாழ்வுடன் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்.
போரில் அசுவத்தாமா என்ற யானையைக் கொல்வது; அதை தர்மர், உரத்த குரலில் ‘அசுவத்தாமா...’ என்று ஆரம்பித்து, மிக மெல்லிய குரலில் ‘என்ற யானை...’ என்று தொடர்ந்து, பிறகு மீண்டும் உரத்தக் குரலில் ‘இறந்துவிட்டான்!’ என்று சொல்வது என்று திட்டம் வகுத்தார் பகவான். இப்போது, இந்த யுத்தக் களத்தில் பொய் சொல்ல விரும்பாத தர்மர் உண்மையைத்தான் சொல்லப்போகிறார்; அதுவும் வார்த்தைகளில் ஒலி ஏற்றத்தாழ்வுடன் சொல்லப் போகிறார், அவ்வளவுதான். இப்போதும் அரை மனதுடன்தான் தர்மர் அந்த தந்திரத்தை செயல்படுத்த தானும் உடந்தையாக இருக்க சம்மதித்தார்.
ஏன் அரை மனது? துரோணாச்சார்யாரின் மகன் பெயரும் அசுவத்தாமன்தான். ‘அசுவத்தாமன்..........இறந்துவிட்டான்,’ என்ற தகவலை அவர் கேட்க நேர்ந்தால், மனம் நொந்தே தன் உயிரை விட்டுவிடுவார் என்பதுதான் கிருஷ்ணனின் எதிர்பார்ப்பு. அவரை மாய்த்துவிட்டால், பிறகு துரியோதனர்களைப் போரில் வழிநடத்தச் சரியான ஆசான் இல்லாமல் போய்விடும் என்பதால், அவர்களை எளிதாக வென்றுவிடலாம்! ‘அசுவத்தாமா இறந்தது; ஆனால், அசுவத் தாமன் இறக்கவில்லை. இந்தக் குழப்பத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கிருஷ்ணரின் திட்டம் தர்மருக்கு முழுமையாக ஏற்புடையதல்ல.
‘‘உன்னுடைய நல்ல மனத்தால், அந்த பலவீனத்தால், நீயும், உன் தமையன் மார்களும், உன் மனைவியும், உன் தாயும் ஏமாந்தது போதும், இனியாவது அதற்குப் பழிக்குப் பழி வாங்கிக்கொள்,’’ என்று கிருஷ்ணன் மேலும் ஊக்குவித்தார். வேறு வழியில்லை. தர்மர் உடன்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே, தன் மகன்தான் போரில் கொல்லப்பட்டான், அதுவும் தர்மர் வாயாலேயே கேட்க நேர்ந்தது என்றால் அது நிச்சயம் உண்மைதான் என்று நம்பிய துரோணாச்சார்யார் அப்படியே ஒடுங்கிப்போய் மயங்கிச் சாய்ந்தார். அப்போது பாண்டவர் பக்கத்திலிருந்து திருஷ்டதுய்மன் பாணம் வீச, அவர் உயிர் நீத்தார்.
இந்தச் சம்பவம் தர்மரை வெகுவாக பாதித்தது. அதர்மத்துக்கு அதர்மம்தான் சரியா என்று பலமுறை கிருஷ்ணனைக் கேட்டுக் கேட்டு மாய்ந்துபோனார். யுத்தத்தில் துரியோதனாதியர்கள் மடிய, பாண்டவர்கள் தம் நாட்டை மீட்டுக்கொண்டார்கள். இழந்த சொத்துகள் மீண்டன; ஆனால் இழந்த மனஅமைதி திரும்புமா? ஒரு பொய்யால் தமக்கு வில்வித்தை கற்பித்த ஆசானையே கொன்றுவிட்ட தனக்குப் பிராயசித்தம் உண்டா? தவித்தார் தர்மர். க்ஷேத்திராடனம் புறப்பட்டார். பல தலங்களைத் தரிசித்த அவர், இந்த திருச்செங்குன்றூர் தலத்துக்கு வந்தபோது, மனம், மிகவும் அமைதியாவதை உணர்ந்தார்.
தன் தோஷத்துக்குப் பிராயசித் தம் இங்கே தனக்கு அனுக்ரகிக்கப்படுவது அவருக்குப் புரிந்தது. பகவான் கிருஷ்ணனே, இங்கே இமையவர் அப்பனாகக் காட்சி அளிக்க, அப்படியே நெகிழ்ந்து போனார் தர்மர். அதோடு உடனே, அங்கேயே, அர்ச்சாவதாரமாகக் காட்சியளித்தப் பெருமாளுக்கு ஒரு கோயில் உருவாக்கினார். அந்தக் கோயில்தான் இப்போது நாம் தரிசிக்கும் திருச்செங்குன்றூர் திவ்யதேசம். இதனை ‘தர்மர் அம்பலம்’ என்றழைக்கிறார்கள். இந்தத் தலத்தில்தான், இந்தப் பெருமாள்தான், முருகப் பெருமானுக்கும் சூரபத்மனைக் கொல்லும் ஆற்றலை அளித்திருக்கிறார் என்கிறது இன்னொரு புராணத் தகவல்.
அது என்ன? சூரபத்மன், சிவபெருமானால் பல வரங்கள் அருளப் பெற்றவன். அந்த ஆணவத்தில் அவன் தேவர்களைப் பெரிதும் இம்சிக்கத் தொடங்கினான். அவனால் ஏற்பட்ட வேதனைகளைத் தாங்க இயலாத தேவர்கள், சிவபெருமானிடம் அழுது முறையிட்டார்கள். அவர்தானே வரம் கொடுத்தார், அதனால் அவருடைய சொல்லுக்கு அசுரன் கட்டுப்படுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ, அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்ததால் தான் அவனுடைய தகுதிக்கும் மீறிய வரங்களைக் கொடுத்துவிட்டதாகவும், அதனால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது என்றும், திருச்செங்குன்றூரில் கோயில் கொண்டிருக்கும் இமயவர் அப்பனைச் சரணடைந்து தொழுதால், அவர் நல்வழிக் காட்டுவார் என்றும் அவர்களை ஆற்றுப்படுத்தினார்.
உடனே தேவர்கள் இமயவர் அப்பனை அடைந்து நற்கதி வேண்டினார்கள். அவர்களுடைய குறைகளைக் கேட்ட பெருமாள், சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத்திருக்கும் வரங்களையும் அறிந்துகொண்டார். அந்த வரங்களையும் மீறிய ஒரு சக்தியால்தான் அவனுடைய வதம் நிகழ வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டார். பிறகு முருகப் பெருமானை அழைத்து அந்தப் பொறுப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முருகனும் தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனையும் அவனுடைய அரக்கர் படைகளையும் வதைத்து ஒழித்தான்.
பல்வேறு வடிவங்களில் தோன்றி போரிட்ட சூரபத்மனை முருகன் ஒவ்வொன்றாக வெற்றிகண்ட நேர்த்தி கண்டு தேவர்களுடன் பெருமாளும் வியந்து மகிழ்ந்தார். இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி, அவ்விரண்டையுமே தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டான். இந்தப் பெருந்தன்மையையும் பாராட்டினார் பெருமாள். கேரளத்துப் பாரம்பரியத்தை விளக்கும் வட்டவடிவமான கருவறையினுள் இமையவர் அப்பன் கொலுவிருக்கிறார். தர்மரின் மன ஆறுதலுக்குக் காரணமான பெருமாள் இவர் என்றெண்ணும்போது, எத்தகைய மனக் குழப்பத்தையும் தீர்த்துவைக்கும் பிரகாசமும் மனதில் ஒளிர்கிறது.
மிகப் பெரிய வெளிப் பிராகாரம். பசுமை கொழிக்கும் இயற்கைச் சூழலுடன், மிக சுத்தமாக விளங்குகிறது கோயில் வளாகம். ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறார். அவருக்குச் சற்று அருகில் ஆவுடையுடன் கூடிய லிங்கம் அருள்பாலிக்கிறது. கோசாலை கிருஷ்ணனுக்கும் ஒரு சந்நதி. ஒரு பெரிய அரசமரத்துக்கு அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். அந்த மரத்துக்கு பக்தர்கள் பூஜை செய்கிறார்கள். பக்கத்தில் திருச்சிற்றாறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தலத்தின் இந்த தீர்த்தமானது சங்க தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது. அவர் பாடிப் பரவசப்பட்ட பத்துப் பாசுரங்களில் ஒன்றை இங்கே சுவைப்போம்:
வார்கடா அருவி யானை மாமலையின்
மருப்பு இணைக்குவடு இறுத்து உருட்டி
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து
அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ்பரண்மேல்
போர்கடா அரசர் புறக்கிட மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறி எங்கள் செல்சார்வே
-‘குவலயாபீடம் என்ற மலைபோன்ற யானையின் அருவிபோலப் பொங்கிப் பெருகும் மதநீரையும் கண்டு மருளாது அதன் இரு தந்தங்களையும் பிடித்திழுத்து, முறித்து அந்த பேருரு யானையை வதம் செய்தவன், எம்பெருமான். அதுமட்டுமா, அரங்கில் நெடிதுயர்ந்த மல்லர்களையும் வீழ்த்தியவன். பரண் அமைத்துப் போரிட்ட அரசர்களையும் வெருண்டோட வைத்தவன். மண்டபத்தின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த கம்சனை அழித்தவன். இத்தனையையும் ஓர் இடைச் சிறுவனாக, பால்ய பருவத்திலேயே நிகழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்தவன். அந்தப் பெருமான் உறையும், திருச்சிற்றாற்றங்கரை மீதமைந்த திருச்செங்குன்றூர் எனும் திவ்ய தேசமே நாமெல்லாம் சென்றடைய வேண்டிய இடம்,’ என்கிறார்.
தியான ஸ்லோகம்
திருச்செங்குன்றூர் சென்று இமையவர் அப்பனை தரிசிக்கும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
ஸ்ரீ விஷ்ணுர் தேவதா தஸ்த் வருணஸரஸிஜா ரக்த நேத்ரஸ்தலேச:
பச்சாத் ஸ்ரீ சங்க தீர்தாச்ரய புவிசஜ கஜ்ஜியோதிரங்கே விமாநே
யோபாதி ஸ்வர்ண வல்ல்யாஸ ஹரிரநுதிநம் பாதுசித்தேமதியே
பச்சாத் வக்த்ரச்ச பஸ்மாஸுர தநுமதநா சக்த சம்போ: ப்ரஸந்ந:
(ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்)
பொதுப் பொருள்: ‘ரக்த நேத்ரஸ்தலம்’ (செங்குருதிபோல சிவந்து திகழும் திருச்செங்கண்ணூர்) என்று கூறப்பெறும் திருச்செங்குன்றூர் என்னும் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் இமையவர் அப்பனே நமஸ்காரம். ஸ்வர்ணவல்லித் தாயாருடன், ஜகஜ்யோதி விமான நிழலில், சங்க தீர்த்தக் கரையில், மேற்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், முருகப் பெருமான் மூலமாக பஸ்மாசுரனை அழித்து, அவருக்கு நேரிலும் காட்சி கொடுத்து அருளிய எம்பெருமானே, நமஸ்காரம். இதே நிலையில் என்றைக்கும் என் உள்ளத்தில் தாங்கள் விளங்குவீர்களாக. திருவனந்தபுரம்-கொல்லம்-எர்ணாகுளம் பாதையில் செங்கணூர் ரயில் நிலையத்தில் இறங்கி, இக்கோயிலை அடையலாம்.
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen