கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

வைகுண்ட ஏகாதசி !

ஒரு காலத்தில் அம்பரீஷன் என்பவன், இப்பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து வந்தான். அவன் ஏகாதசி விரதத்தை தவறாது கடைபிடித்து வந்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி சமயத்தில், யமுனைக்கரையில் கோபக்கார துர்வாச முனிவரை அவன் சந்தித் தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.

யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற முனிவர், நீண்டநேரமாகியும் வரவில்லை. அம்பரீஷனின் ஏகாதசி விரத பலனை பங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இவ்வாறு அவர் செய்தார்.

செய்வதறியாது திகைத்த அம்பரீஷனிட அங்கிருந்த மற்ற ரிஷிகள், ""அம்பரீஷா! துளசி தீர்த்தத்தையாவது சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு விட்டு உணவு உண்பது தான் தவறு. தீர்த்தம் அருந்துவதால் குற்றமில்லை,''என்று ஆலோசனை கூறினர். அம்பரீஷனும் துளசி தீர்த்தத்தை அருந்தினான். துர்வாசரும் வந்து சேர்ந்தார். தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்ததம் உண்டதைக் கேட்டு கோபம் கொண்டார். தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார். அது பயங்கர பூதமாக மாறி அம்பரீஷனைத் துரத்தியது. அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது. அதோடு மட்டுமில்லாமல் துர்வாசரையும் துரத்தியது. துர்வாசர் பாற்கடலுக்கு ஓடி மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு முறையிட்டார்.

""துர்வாசரே! யாரொருவர் பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடையஇதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,'' என்றார். துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனுடன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார். ஏகாதசி விரதமிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் :ஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும் போது, இந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு, இப்பிறவியில் செல்வவளமும், பின்னர் பிறப்பற்ற நிலையும் அமையும்.

* காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

* கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

* காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

* எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

* தேவேந்திரனின் அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம். ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

* ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும் (ஆந்திரா), புரு�ஷாத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

* "பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது' என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

திருமாலே இருக்கும் விரதம் : குறிப்பிட்ட நாளில் நம் நன்மைக்காக இஷ்ட தெய்வத்தைக் குறித்து உணவு உண்ணாமல் நோன்பாக இருப்பதை விரதம் என்பர். இதில், ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை. அனைத்தையும் கடந்தவர் கடவுள். நமக்குத் தான் விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம். கடவுளுக்கு ஏது என நமக்குத் தோன்றலாம். சத்தியத்தைக் காக்க மகாவிஷ்ணுவே திரேதாயுகத்தில் ராமனாகப் பிறந்தார். சாதாரண மனிதனைப் போல பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டினார். அப்பரம்பொருளே துவாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநிறுத்தி உதாரண புருஷராகத் திகழ்ந்தார். அதேபோல, பரம்பொருளான விஷ்ணுவே, ஏகாதசியின் சிறப்பினை உணர்த்தும் வகையில், அவரே விரதம் இருந்து அருள் செய்கிறார்.

விரதமுறை : ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமிநாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும். விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா, "டிவி' பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை கறி சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக் கூடாது. பூஜைக் கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசிவிரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

ஏகாதசி விரத மகிமை : பரமேஸ்வரனிடம் ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது எனக்கேட்டாள். ""உமா! விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதமே! பாவங்களைப் போக்கும் விரதம் இது! இதை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்துமுக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து பாற்கடல் வாசனின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ""வைகுண்ட முக்கோடி ஏகாதசி'' என்ற சிறப்புப் பெயருண்டு. யார் ஒருவர் ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்று மேலான கதியை அடைகிறார்,'' என்றார். சிரார்த்தம் கூடாது ஏகாதசி நாளில் தாய், தந்தையருக்கு சிரார்த்தம் முதலிய பிதுர்கடன் இருந்தால், அதை நிறுத்திவைத்து ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்றே செய்ய வேண்டும் என்று விரதசாஸ்திரம் கூறுகிறது.

Get this gadget at facebook popup like box
09