இவற்றிலே பன்னிரண்டு அம்மன் ஆலயங்களாக இருந்த போதிலும் அவற்றில் இரண்டு முருகன் ஆலயங்களாக காலப்போக்கிலே மாற்றமடைந்துவிட்டன. கண்ணகை அம்பாள், குறிகட்டுவான் மனோண்மணி அம்பாள், முத்துமாரி அம்பாள், காளிகா பரமேஸ்வரி அம்பாள், மாவுதிடல் மலையடி நாச்சியார், கள்ளிக்காடு துர்க்கை அம்பாள், பட்டயக்கார அம்பாள், கண்ணகிபுரம் பத்திரகாளி அம்பாள், பிட்டிவயல் நாச்சிமார், இத்தியடி நாச்சிமார் (நாகபூசணி அம்பாள்) என்பனவே ஏனைய பத்து சக்தி பீடங்களுமாம்.
இவற்றுள்ளே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே சிறக்கப்பெற்று வரலாற்றுச்சிறப்புமிக்கதாய் புங்குடுதீவின் தெற்கு கடற்கரையோரத்தில் ஏறத்தாள ஆயிரம் பரப்பு நிலத்திலே
சித்திரமணி மகுடம் பத்மமலர் வதனமும்என்று எல்லோரும் போற்றி வழிபட்டு பேறடையும் வண்ணம் அமைந்திருப்பது கண்ணகை அம்மன் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.
செம்பவள வாய் முறுவலும்
சிந்தூரப் பொட்டழகும் செய்ய விருகாதினில்
திகழும் பொற் கொம்பினழகும்
முத்து மூக்குத்தியும் நெஞ்சிற் பதக்கமும்
முருகுதவழ் மலர் மாலையும்
முத்தாரம் கையினிற் கடகமும் கணையாழி
மொய்த்திட்ட விரலினழகும்
கொத்துமணிமேகலையும் வஞ்சி
நுண்ணிடை – யழகும்
கோகனகப் பாதச் சிலம்பும்
கோடானகோடி யருணோதயப் பிரகாசமும்
கொண்ட நின் காட்சி யடியேன்
எத்தனை விதங்கள்தான் ஒண்ணிருங் காணாது
ஏங்குதே நெஞ்சமம்மா!
எழிலாரும் புங்கைநகர் தென்கரையில்
தங்கி வாழ் இராஜராஜேஸ்வரி அம்மையே!
புங்குடுதீவிலே வாழ்ந்த நிலச்சுவாந்தர்களில் ஒருவராகிய கதிரவேலு ஆறுமுகம் உடையார் என்பார் ஒரு பொழுது ஒரு பேழையினை புங்குடுதீவின் தென்கிழக்கு கடற்கரையிலே கோரியா என்னும் இடத்தில் கண்டெடுத்தார். அப்பேழையினை எடுத்து வந்து தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்திலே இருந்த பழமையான பூவரசம் மரத்தின் கீழே வைத்து திறந்து பார்த்தபோது அங்கே ஒளிமயமாகிய ஒரு அம்பாள் சிலை காணப்பட்டது. உடனே ஆறுமுகம் உடையார் ஊர்மக்களின் உதவியோடு அங்கே சிறியதொரு கோயிலை அமைத்து வணங்கி வந்தனர். கண்ணகி அம்மனை பேழையுடன் வைத்த நானூறு வருடங்கள் பழமையான பூவரசு மரம் தலவிருட்சமாகியது. இச்சம்பவம் நடைபெற்றது 15ம் நூற்றாண்டாயிருத்தல் வேண்டும்
காலத்துக்கு காலம் இவ்வாலயம் புனரமைக்கப்பெற்று வந்து நாளடைவிலே சுண்ணக்கல்லினாலே நிரந்தரக்கட்டடம் அமைக்கப்பெற்றது. 1880ம் ஆண்டிலிருந்து நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்த்தொடங்கியது.
1931ம் ஆண்டு கோவில் புனரமைப்புச்செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. இதன்போது கருவறையில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தின் வடக்குப்புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாக சமுத்திரத்தை நோக்கியதாக ஸ்ரீ கண்ணகை அம்பாளும் பிரதிட்டை செய்யப்பட்டனர். இவ்வாண்டு கோயில் திருவிழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
1944 இல் கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957இல் ஆலயத்தின் சுண்ணாம்புக் கட்டடம் அனைத்தும் சீமெந்துக் கட்டங்களாக மாற்றம்பெற்றன. இதன்பின் 1964இல் கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957 இல் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுர வேலைகள் மற்றும் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சித்திரத்தேர் வேலைகளும் 1979இல் நிறைவு செய்யப்பட்டதோடு நைமித்திய பூசைகள் சித்திரா பௌர்ணமியை ஆரம்பமாய் கொண்டு 15 நாட்களாக மாற்றப்பட்டது. 1954ம் ஆண்டில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவின் சிறப்புப்பற்றி இன்றும் பேசப்படுகின்றது.
பொன்பெருகு சைவநெறிப்
புண்ணியம்பொலியமறை
பூத்தவாகமங்கள் பொலியப்
புராணவிதிகாசங்கள் தருநீதி நிறை பொலியப்
பொழிந்த திருமுறைகள் பொலிய
அன்புநாண் ஒப்புரவு
கண்ணோட்டம் வாய்மையெனும்
ஐந்துமுயர் சால்பு பொங்கும்
ஆனந்த சமுதாய ஞானவொளி பொலியமெய்
யடியாரும் தமிழும் பொலிய
முன்புதொடுவினை நீக்கி முத்தியுறு பணியாக்கி
முந்துமன் னுயிர்கள் பொலிய
முத்துநவ ரத்தின மிசைத்த மணித் தேரேறி
முதுவீதி வருமன்னையே
இன்பமிகு நின்பாத பங்கயமலர்ந்த சுக
மெங்களுக் கினிதருளுவாய்
எழில்வாரிப் புங்குநகர் வந்த கண்ணகித்தாயே!
இராஜராஜேஸ்வரியே!