கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

தானமாக தவத்தையே அளித்த அன்னையின் உள்ளம்!

அகில உலகையும் காத்துவருபவர் ஆதிபராசக்தி. கருணையுள்ளம் கொண்ட கல்யாணி.உலகின் மக்களை பாசமுடன் காத்துவரும் பார்வதிதேவியின் புராணங்கள் வாயிலாக அறியபட்ட கதை இது. தாயாய் அனைவரையும் காத்திடும் ஜகதீஸ்வரியானவர் வலிமை பொருந்திய இமவானுக்கு அருமைமகளாகத் தோன்றினார். அப்போது சிவபெருமானைக் கணவனாக அடைய விரும்பி கடும்தவம் மேற்கொண்டார்.

அவரின் தவச்சிறப்பை மெச்சி சிவபிரானும் சக்தியின் எதிரே காட்சி அளித்து அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார். திருவிளையாடல் புரிவது சிவனார்க்கு பொழுது போக்கு. ஆனாலும் சிவனின் திருவிளையாடல் உலகிற்கு உண்மையை உணர்த்தும் தத்துவம் அடங்கி இருக்கும். அவரின் ஆடல் மனைவி மக்கள் தேவர்கள் முனிவர்கள் அசுரர்கள் அடியவர்கள் அன்புபக்தர்கள் உலகின் உயிர்கள் அனைத்திலும் புரிந்திருப்பார். அப்படி ஆடல் அகிலலோக அன்னையிடமும் ஆடிப்பார்க்க நினைத்து மறைந்து விட்டார். பார்வதி தவச்சாலையில் இருந்து வெளியே வந்து கற்பாறையில் அமர்ந்திருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஒரு சிறுவனின் அழுகைக் குரல் கேட்டது. சிறுவனின் அவலக்குரலைக் கேட்டு தாயுள்ளம் தவித்தது. பராசக்தி சிறுவனின் கதறலைக் கேட்டு சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்து சென்றாள். அங்கு கண்டகாட்சிதான் என்ன, முதலை ஒன்று சிறுவனை விழுங்குவதற்காக அவன் காலைக்கவ்விப் பிடித்துக் கொண்டு ஆற்றுக்கு உள்ளே இழுத்துக் கொண்டு சென்று

கொண்டிருந்தது. அந்தசிறுவனின் அழுகுரல் மிகபரிதாபமாக இருந்தது. அவன் வீட்டுக்கு மூத்தபிள்ளை என்றும் அதிலும் ஒரேபிள்ளையான என்னை விழுங்கிவிட்டால் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேறும் யாரும் இல்லை என்றும் இந்த முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா, என்ற  அவனின் அலறல் சத்தம் கேட்டதும் சக்திதேவி விரைந்து வந்து முதலையைப் பார்த்து கூவிஅழைத்தார். "முதலையரசே, பாவம் ஒன்றும் அறியாத இந்தக் குழந்தையை தயவு செய்து விட்டு விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாள். ஆனால் முதலையொ சிறுவனை விட்டுவிடுவதாக இல்லை. "ஒரு நாளில் இந்த நேரத்தில் எது என் அருகில் வருகிறதோ அதையே உணவாகக் கொள்வது வழக்கம். அதன்படி இன்று இந்தச்சிறுவன் தான் எனக்கு இரையாகப் போகிறான். பிரம்மாவே இவனை இங்கு அனுப்பியிருக்கிறார். ஆகவே இவனை விட்டுவிடுவதற்கில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்" என முதலை கூறியது.

இப்பதிலை சற்றும் எதிர்பார்க்காத தேவி சிறிது கலங்கினாலும் பின்பு தெளிவு பெற்று "முதலையே நான் தங்களை வணங்கிக்கேட்டுக் கொள்கிறேன். இமயம் சென்று கடும் தவம் செய்திருக்கிறேன், அத்தவத்திற்காக அதன் வலிமைக்காக இந்தச்சிறுவனை விட்டு விடும்படி தங்களை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பார்வதி தேவி கெஞ்சிக் கூறினாள். அதைக்கேட்ட முதலை "தேவி நீங்கள் இதுவரை செய்த கடுமையான தவங்களின் பலன் முழுவதையும் அப்படியே எனக்கு கொடுப்பீரானால் நான் இந்தச்சிறுவனை இக்கணமே விட்டுவிடுகிறேன்" என்று தெரிவித்தது.

முதலையின் வேண்டுகோளைக் கேட்ட தேவிக்கு மிகுந்த உற்சாகம் பெருகியது. "முதலையரசே இந்தத் தவப்பயன் மட்டுமென்ன இத்தனை பிறவிகளிலும் சேர்த்து வைத்த புண்ணியச்செயல்களின் பலன் முழுவதையுமே அப்படியே தங்களுக்கு தந்து விடுகிறேன். நீங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாது அனுப்பிவையுங்கள்" எனப்பிரார்த்தித்த மறுகணமே தவப்பயன் முதலையை அடைந்து விட முதலையின் உடல் பளபள என பொன்போல் மிளிரத்தொடங்கியது.

கண்களைகூசச் செய்யும் ஒளியைப்பெற்ற முதலை, "தேவி அவசரப்பட்டு என்னகாரியம் செய்து விட்டீர்கள். சற்றுச் சிந்தித்திருக்கக்கூடாதா, தவத்தை எவ்வளவு கஸ்டப்பட்டு இயற்றியிருப்பீர்கள், எந்த இலட்சியம் அடைய கடும்தவம் இயற்றியிருப்பீர்கள்  அப்படிப் பட்ட அளப்பரிய மகத்தான தவத்தை எனக்கு அளித்துவிடுவது. தங்களுக்கு நல்லதல்ல. எனினும் தாங்கள், இந்த ஏழை அந்தணச்சிறுவனிடம் காட்டிய இரக்கத்தையும் திக்கற்ற எளியவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள இரக்கசிந்தையையும் கண்டு களிப்படைகிறேன்.
தாங்கள் எனக்கு அளித்த தவத்தையும் சிறுவனின் உயிரையும் திரும்பவும் நான் வரமாக உங்களுக்கே அளித்து விடுகிறேன், எடுத்துக்கொள்ளுங்கள்" என்று முதலை தேவியிடம் தெரிவித்தது.

தேவியும் முதலையைப்பார்த்து கூறினார், "முதலை அரசே என் உயிரைக் கொடுத்தாவது சிறுவனைக்காப்பாற்ற வேண்டியது என் தலையாய கடமை தவத்தின் பலன் போய்விட்டால் மறுபடியும் தவம் செய்து கொள்ளலாம். ஆனால் சிறுவன் இறந்து விட்டால் மீண்டும் அவன் உயிரைத்திரும்பப் பெறமுடியுமா ஆகவே சிந்தித்து இந்த முடிவுக்கு  வந்தேன். எந்த உயிரும் எனக்கு முக்கியம் அழிந்துபோக விட மாட்டேன். அதோடு ஒரு முறை பிறருக்கு அளித்த பொருளை திரும்பப் பெறும் வழக்கம் எனக்கு இல்லை ஆகையால் தயைகூர்ந்து என் தவபலன்களை ஏற்றுக் கொண்டு சிறுவனை விட்டுவிடுங்கள்." இப்படி தேவியின் வேண்டுகோளை ஏற்றமுதலை சிறுவனை விட்டுவிட்டுத் திடீரென்று மறைந்து விட்டது. தேவியும் சிறுவனை அன்போடு அணைத்து வீட்டிற்கு வழி அனுப்பி
வைத்தார்.

பின்னர் தவபலன்கள் யாவும் போய்விட்டதால் மீண்டும் தவம் செய்ய அம்பிகை உட்கார்ந்து விட்டாள். அந்நேரம் சிவன் தோன்றி "தேவி இனியும் நீ தவம் இயற்ற வேண்டியது இல்லை. உன் தவப்பயன் முழுவதையும் எனக்கே கொடுத்து விட்டாய். முதலையாக சிறுவனாக வந்தது நானேதான் உன் பெருமயையும் இரக்க குணத்தையும் சோதிக்கவே இவ்விளையாடல் புரிந்தேன். தானம் செய்வது என்பது புண்ணியம் அதிலும் தவம் செய்து அதை தானமாக வழங்குவது என்பது அதைவிட மிக உயர்ந்தது. இப்படி புண்ணியம் செய்ததவப்பலன் தானமாக வழங்கும் போது அது பல்கிப் பெருகி பல ஆயிரம் மடங்காக உனக்கே பெருகியிருக்கின்றன. அவை எந்நாளும் குறையமாட்டா," என்று கூறி அகில லோக மாதாவுடன் சிவனார் கயிலைமலைக்கு சென்றார்.

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. என்று அன்புடமை' அதிகாரத்தில் கூறும் வள்ளுவர், அன்பு இல்லாதவர் எல்லாப்பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர், அன்பு உடையவர் தம் உடம்பையும்

பிறருக்கு உரிமையாக்கி வாழ்வர். ஆகவே ஜபம் தியானம் போன்ற ஆத்மசாதனங்களைப் பழகும் சாதகன் அவற்றைச் செய்து முடித்தான பிறகு முடிவில் அவற்றின் பலன்களையும் இறைவனின் திருவடிகளில் அர்ப்பணித்து விட வேண்டும். பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கி பத்து அடி வருகிறார். இதை உலகிற்கு உணர்த்த ஆடும் ஆனந்த நடராஜனுக்கு அன்னை சிவகாமியும் ஆடிக் களித்தார்.

Get this gadget at facebook popup like box
09