செப்டம்பர் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தொடர்பான சில தகவல்களை இங்கே காணலாம்.
பொதுவாக அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் மூன்றாம் பிறையைப் பார்க்க ஆவலோடு இருக்கும் நாம், நான்காம் நாள் சந்திரனைப் பார்த்துவிட்டு ஐயோ பார்த்து விட்டோமே என்று புலம்புவோம்.
நான்காம் நாள் சந்திரனை பார்த்துவிட்டால் ஞாபக மறதி ஏற்படும் என்று முன்னோர்கள் நம்மிடம் கூறி வைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
சரி, இது பற்றி புராணங்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தால், விநாயகருக்கு உகந்ததான சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்தல் கூடாது என்கிறது புராணக் கதைகள். அதாவது, ஆண்டில் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் சந்திரனை பார்த்தல் ஆகாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
அதாவது, சதுர்த்தி என்பது விநாயகருக்கு உகந்த நாள். அவ்வாறு ஒரு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, தனக்கு நடைபெறும் பூஜைகள், பாடல்கள், வழிபாடுகளால் குதூகலமடைந்த விநாயகரைப் பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்துள்ளார். மேலும், அவரை எரிச்சலூட்டும் வகையில் விநாயகரைப் போல நடனமாடியும் காட்டியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த விநாயகர், சந்திரனை சபித்து விடுகிறார். இந்த சாபத்தால் வருந்திய சந்திரன், கடும் தவம் இருந்து விநாயகரிடம் மன்னிப்புக் கோருகிறார்.
சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், சந்திரனை மன்னிக்கிறார். ஆனாலும், சந்திரன் செய்த தவறை வேறு யாரும் செய்யாமல் இருக்கும் வகையிலும், சந்திரன் செய்த தவறுக்கு தோஷமாகவும், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்றும், அவ்வாறு பார்த்துவிட்டால் விநாயகருக்கு செய்த பூஜையின் பலன்கள் கிடைக்காமல் தோஷம் ஏற்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி அன்று தெரியாமல் சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகாரமாக அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
இனிமேல், நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது என்று கேட்கும் நம் குழந்தைகளுக்கும் இந்த புராணக் கதையை கூறலாம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen