கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் உருவத் தத்துவம்



“கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்”
பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம்.

சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக – தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு.
தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத்தண்மையை அருளுகின்றனர். ஞானமே வடிவமாக விளங்குவது சிவம்.
அவரை ஞானத்தாலேயே தொழ வேண்டும். ஆலமர் செல்வனாக அருந்தவர் நால்வருக்கும் மௌனமாயிருந்து சொல்லாமற் சொல்லி – உபதேசிக்கும் ஞானமூர்த்தியே தட்சிணாமூர்த்தி. இவர் ஆசாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். சிவத்தினிடம் சக்தி அடங்கிய வடிவம் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி வடிவைச் சிவாலயங்கள் அனைத்திலும் காணலாம். கருவறையின் தென் சுவரில் வெளிப்புறம் தெற்கு நோக்கி இவர் எழுந்தருளி நம்மை எல்லாம் தன் மோனத்தால் அழைத்து சிவஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றனர். இவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.
திருமேனி:
பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.
வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்:
அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.
திருக்கரத்திலுள்ள நூல்:
இது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.
திருக்கரத்தில் உருத்திராக்கமாலை:
36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.
இடக்கரத்தில் அமிர்தகலசம்:
அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.
சின்முத்திரை:
ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும்.
உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.
புலித்தோல்:
தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்.
தாமரை மலர்மீது அமர்தல்:
அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.
நெற்றிக்கண்:
காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.
ஆலமரமும் அதன் நிழலும்:
மாயையும் அதன் காரியமாகிய உலகமும்.
தென்முகம்:
அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.
அணிந்துள்ள பாம்பு:
குண்டலினி சக்தியைக் குறிப்பது.
வெள்விடை:
தருமம்
சூழ்ந்துள்ள விலங்குகள் :
பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.
முயலகன்:
முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு.

Get this gadget at facebook popup like box
09